கவுகாத்தி:

அஸ்ஸாம் ஜோர் காட் மாவட்டம் எடபா ராபர் சாரியலி பகுதியை சேர்ந்தவர் திலீப் டே (வயது 50). ஏழையான அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவருக்கு உடல் ஊனமுற்ற ஒருவர் மட்டுமே உறவினர்.

திலீப் டே உடலுக்கு இறுதி சடங்குகள் செய்வதற்கு ஆளில்லாத நிலை ஏற்பட்டது. ஜோர்காட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மிக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த எம்.எல்.ஏ. இறுதி சடங்குகளை மேற்கொண்டார்.

பின்னர் அவரது உடலை மூங்கில் பாடையில் வைத்து சுடுகாட்டுக்கு சுமந்து சென்றார். திலீப் டேவின் இறுதி சடங்கை எந்த குறையும் இன்றி முடித்து வைத்தார். அதே நேரத்தில் அப்பகுதி ஆட்டோ ரிக்‌ஷா டிரைவரின் தாயார் இறந்துவிட்டார். அவரது இறுதி சடங்கிலும் இவர் கலந்துகொண்டார்.

3 முறை இந்த தொகுதி எம்எல்ஏ.வாக உள்ள இவரது செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர். 2017-ம்ஆண்டு ஜூலையில் அஸ்ஸாம் காசிரங்கா தேசிய பூங்கா பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இங்கு மீட்பு பணிகளை மேற்கொண்ட குர்மி 50 கிலோ அரிசி மூட்டையை சுமந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் அப்போது பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.