அசாமில் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வில் சேருவதற்கு விநோத அழைப்பு – ‘எம்.எல்.ஏ.க்கள் வேண்டாம்… தொண்டர்கள் வரலாம்’…

Must read

 

அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது.

தேர்தல் நெருங்குவதால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஆளும் பா.ஜ.க.வில் சேருவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அண்மையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜந்தா, ராஜ்தீப் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதற்கு பா.ஜ.க.வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறிப்பாக அந்த இரு எம்.எல்.ஏ.க்கள் அங்கம் வகிக்கும் தொகுதியில் உள்ள பா.ஜ.க.வினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

“கட்சியில் நேற்று வந்தவர்களுக்கு டிக்கெட் கொடுப்பீர்கள். காலம் காலமாக, கட்சியில் இருக்கும் எங்களுக்கு என்ன மரியாதை ?” என அவர்கள் கட்சி மேலிடத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அசாம் மாநில பா.ஜ.க. தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் அளித்துள்ள பேட்டியில் “இனிமேல் எதிர்க்கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பா.ஜ.க.வில் சேர வேண்டாம். உங்களுக்கு சீட் கொடுக்க எங்களிடம் தொகுதிகள் இல்லை” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

“ஆனால் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் பாரதிய ஜனதாவில் தாராளமாக சேரலாம், அவர்களுக்கு எந்த தடையும் இல்லை” என்று ரஞ்சித் மேலும் தெரிவித்தார்.

– பா. பாரதி

More articles

Latest article