பொங்கல் பண்டிகையை ஒட்டி, திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

“பொங்கலை கொண்டாடுவதற்காக தயாராக காத்து கொண்டிருக்கிறோம். துணிக்கடைகளும், நகைக்கடைகளும், தள்ளுபடி விலையில் விற்பனைச் செய்யும் கடைகளும் மக்கள் கூட்டங்களால் நிரம்பி வழிகின்றன. நம்மை மகிழ்விப்பதற்காக தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டு புதுப்புது திரைப்படங்களைக் காட்டவும், சினிமா நடிகர்களைக் காட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் இரவு பகல் பாராது உழைத்து கொண்டிருக்கின்றன. மக்களுக்கு விருந்தளிக்க வரும் திரைப்படங்களுக்கு முன்பதிவு செய்யக் காத்து கிடக்கிறோம்.

எப்பொழுதும்போல் அரசியல் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துச் செய்திகளைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து உலகத்திற்கு நாமெல்லாம் தமிழினம்தான் என்பதை உணர்த்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை தான்.

அதேவேளையில் இந்தப் பண்டிகைக்கு ஆதாரமான, நமக்கெல்லாம் உணவளித்து இந்த உயிரையும் உடலையும் காப்பாற்றித் தருகின்ற மிச்சம் மீதி இருக்கின்ற உழவர்களும் நம்மைப் போலவே கொண்டாட வேண்டும் என்பதையும் நாம் நினைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கும் மேலாக நாள்தோறும் அடுக்கடுக்காக செத்து மடியும் உழவர்கள் பற்றிய செய்திகளை நாமும் கண்டு கொள்ளாமல் கடந்துப் போகிறோம்.

அவர்கள் வீட்டில் எழுகின்ற அழுகுரல் மட்டும் நமக்கோ, கேட்க வேண்டியவர்களுக்கோ கேட்கவே இல்லை. நட்டம் வரும் என்று தெரிந்தே வேறு வழியில்லாமல்தான் விவசாயம் செய்து வருகிறார்கள். கடன் வாங்கியவர்களுக்கு எப்படி பதில் சொல்லப் போகிறோம் என நினைத்தும், எப்படி எதிர்காலத்தில் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறோம் என நினைத்தும் மானத்துக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் மாண்டுப் போகும் உழவர்களின் உண்மையான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது. காவல்துறையில் பதிவு செய்து அவர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டது மட்டுமே கணக்கில் வருகின்றன.

ஆட்சிப்பணியில் இருக்கின்ற அதிகாரிகளுக்கு இதன் உண்மையான விவரம் தெரியும். பாதிக்கப்பட்டு விவசாயி இறந்து அதற்கான சான்றிதழைப் பெற்றால்தான், அரசிடமிருந்து எதாவது இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். அவ்வாறு செல்பவர்களுடைய புகார்களை ஏற்றுக் கொள்ளப்படாமல் திருப்பியனுப்பப்படுவதும் பதிவு செய்யப்பட்ட புகார்களை வறட்சியினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்க கூடாது என்பதற்காக இயற்கையான மரணமாக மாற்றப்பட்டு அவர்களை அனுப்பி வைக்கப் படுவதும் நிகழ்ந்து கொண்டிருப்பதை எவரும் அறிய வாய்ப்பில்லை.

விவசாயிகளின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டுப் போனால் அரசாங்கத்திற்கு கெட்டப் பெயர் வரும் என்பதற்காகவே தங்களின் மனசாட்சி ஏற்றுக் கொள்ளா விட்டாலும் மேலிடத்துக்கு கட்டளைக்கு கட்டுப்பட்டு அதிகாரிகள் இதற்கு உடன்பட வேண்டியிருக்கிறது.

இதுவரை வறட்சியால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 17 பேர்கள் தான் என அரசு வெளியிட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தால் அதிர்ச்சியால் இறந்தவர்கள் 455 பேர். அவர்களுக்கு அதிமுக இழப்பீடு நிதியாக 1௦ இலட்சம் தருகிறது. விவசாயிகளுக்கு தரும் நிதி 3 இலட்சம். இதுதான் அரசாங்கம் இந்த விவசாயிகளின் உயிருக்கு தரும் விலை. விவசாயிகளின் உயிரும் போய் அவர்களுக்கு நேர்மையாக கிடைக்க வேண்டிய இழப்பீடுத் தொகையும் கிடைக்காத நிலையில் அந்த குடும்பங்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை.

வீட்டில் பிணத்தைப் போட்டுவிட்டு இழவுச் செய்திகளோடு அந்த விவசாயிகளால் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியுமா? நாமெல்லாம் நம்முடைய பிள்ளைகளை டாக்டர்களாகவும் எஞ்சினியர்களாகவும் ஆக்குவதற்காக மட்டுமே தயார் படுத்துகிறோம். எந்த ஒரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் விவசாயியாக மாற வேண்டும் என்று விரும்புவதில்லை.

நீ என்னவாகப் போகிறாய் என மாணவர்களைப் பார்த்து கேட்கும் ஆசிரியர்களிடம் எந்த ஒரு மாணவனும் நான் விவசாயம் செய்யப் போகிறேன் என சொல்வதில்லை. இந்த அளவில்தான் நாம் விவசாயிக்கு மரியாதை கொடுத்து வைத்திருக்கிறோம். ஆனால், நமக்கெல்லாம் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வேண்டும், ஒவ்வொரு நாளும் வகைவகையான உணவுகள் வேண்டும். புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து தொலைக்காட்சிப் பார்த்து புது சினிமா பார்த்து விதவிதமாக படம் பிடித்துக் கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும்.

வேட்டி கட்டி காளையை அடக்க வேண்டியவர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு ஒன்றில்தான் தமிழர்களின் மானம் காப்பாற்றப் படுவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உயிர் ஒன்றுதான் விவசாயிகளிடம் இருக்கிறது, அதுவும் இன்று பறிபோய்க் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் போல் உச்சநீதி மன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. கடமைக்கு தனித் தனியாக தங்களின் இருப்பை பதிவு செய்து, இந்த நிலையில் கூட ஒரணியில் திரண்டு, போராடி மத்திய அரசைப் பணிய வைக்காமல், அரசியல் கட்சிகள் கடமையை முடித்துக் கொள்கின்றன. பொதுமக்கள் எனும் பெயரில் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பாதிப்பு வராத வரையில் அது பாதிப்பே இல்லை என மக்கள் அனைவரும் ஒதுங்கிக் கொண்டோம். இந்நிலையில் பாவம் விவசாயி அவன் உயிரை காப்பாற்றிக் கொள்வானா? அவன் நிலையை உணர்த்தப் போராடுவானா?

இவ்வளவு காலம் எப்படியோ இருந்து விட்டோம் இப்போதாவது அவனது அழுகுரல் இந்த உலகத்துக்கு கேட்கட்டும். செத்து மடிந்த விவசாயிகளுக்காகவும், சாகப்போகிற விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காகவும் நாம் இந்த ஆண்டுப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடாமல் தவிர்க்கலாம்…. ! இது நடக்கின்ற காரியமா?

தமிழக அரசு விவசாயிகளுக்காக 15 சலுகைகளை அறிவித்திருக்கிறது. படித்தாவது பாருங்கள். நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால் அதனால் எந்த அளவுக்கு அது விவசாயிகளை வாழ வைக்கும் என்பது புரியும். பருவமழை நம்மைக் கைவிட்டு விட்டது. கோடை மழை நமக்கு மழைத் தரும் என்கிற எந்த உத்திரவாதமும் இல்லை. கால்நடைகளைக் காப்பாற்றும் வழியும் தெரியவில்லை. குடிநீருக்கும் காலைக்கடன் கழிப்பதற்கும் நாமெல்லாம் இவ்வாண்டில் அலையப் போகிறோம் என்பதை போகப்போக அனுபவிக்கலாம்.

அனைத்தையும் கண்டும் காணாததுபோல் இருக்கும் மத்திய அரசு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க மக்கள் வீதியில் இறங்கினால் மட்டுமே விடிவு கிடைக்கும். அறிவித்தால் பலன் பெறப் போவது செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகள் மட்டுமல்ல, அடிப்படைத் தேவைக்கே தண்ணீரில்லாமல் தவிக்கப் போகும் நாமும் தான்.

விவசாயிகளுக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக புத்தாடை அணிந்து, பொங்கல் வைத்து, படமெடுத்து வலைத்தளங்களில் பகிர்வதற்குப் பதிலாக இந்தச் செய்தியைப் பரப்பி நாம் தமிழர்கள் தான் என்பதை நிலைநாட்டுவோம்” என்று எழுதியிருக்கிறார்.

மேலும், “மக்களின் வாக்குகளை வாங்கிக்கொண்டு அவர்களின் எந்தப்பிரச்சினைகளையும் கண்டு கொள்ளாமல் பதவி சுகத்தை அனுபவித்து வருகின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் பிடித்து வைத்துக்கொண்டு “பதில் சொல்லிவிட்டுப்போ” என மக்கள் வீதியில் இறங்கி கேள்வி கேட்காதவரை இங்கு எதற்கும் தீர்வு கிடைக்காது” என்றும் தங்கர் பச்சான் பதிவிட்டுள்ளார்.

.