சென்னை:

சென்னை மாநகர முன்னாள் மேயரும், திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

திமுக எம்எல்ஏவான மா.சுப்பிரமணியன் அரசியல் மட்டுமின்றி,  விளையாட்டுகளிலும் அதிக  ஆர்வம்  உள்ளவர். உலக அளவிலான மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.  கடந்த ஆண்டு 100வது மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்ததால், அவருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியே உடற்பயிற்சி செய்ய முடியாத காரணத்தி னால் தனது வீட்டில் மொட்டை மாடியிலேயே 8 போன்ற வடிவம் கொண்ட ஓடுதளத்தை உருவாக்கி, அதில் ஓடி உடற்பயிற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது புதிய சாதனை படைத்துள்ளார்.  எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடையில் நிற்காமல் ஓடி சாதனை படைத்துள்ளார்.  அதுவும் 4 மணி 8 நிமிடம் 18 நொடிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இது ஆசிய சாதனையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது சாதனை  ‘ASIA BOOK OF RECORDS’ல் இடம்பெற்றுள்ளது.

மா.சுப்பிரமணியன் சாதனை:

மா.சுப்பிரமணியன் கடந்த  2014-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி முதன் முதலாக 21.1 கி.மீ. தூரத்திற்கான மாரத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்று வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

பின்னர்,  இந்தியாவின் 18 மாநிலங்களில் நடந்த பல மாரத்தான் போட்டிகளிலும், 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடந்த மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்று ஓடியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் 99 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற மா.சுப்பிரமணியன்  கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதம்  சென்னை பெசன்ட் நகரில் தனது 100-வது மராத்தான் போட்டியை நிறைவு செய்தார்.

தற்போது புதிய சாதனை படைத்துள்ளார்.