மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டொமினிக்கா தீவில் இன்று நடைபெற்று வருகிறது.
முதலில் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் மதிய உணவு இடைவேளை வரை தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ரவிச்சந்திரன் 2 விக்கெட் எடுத்தார் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டேகனரின் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தி அஷ்வின் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டேகனரின் சந்தர்பால் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இரண்டு தலைமுறை கிரிக்கெட் வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.
டேகனரின் சந்தர்பாலின் தந்தையும் கிரிக்கெட் வீரருமான சிவ்நரேன் சந்தர்பால் விக்கெட்டை நான்கு முறை கைப்பற்றியுள்ள அஷ்வின் அவரது மகனின் விக்கெட்டையும் கைப்பற்றி இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய பந்துவீச்சாளர் அஷ்வின் ரவிச்சந்திரன் மட்டுமே இருந்தபோதும் இந்த பட்டியலில் நியூஸிலாந்து அணியின் தந்தை மகன் வீரர்களான லான்ஸ் மற்றும் க்ரிஸ் கெய்ரன்ஸ் விக்கெட்டை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் இயன் போதம் (இங்கிலாந்து) மற்றும் வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தவிர, சிவ்நரேன் மற்றும் டேகனரின் சந்தர்பால் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் மிட்சேல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) மற்றும் சைமன் ஹார்மர் (தென் ஆப்பிரிக்கா) உள்ளிட்ட நான்கு பந்துவீச்சாளர்கள் ஏற்கனவே இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.