ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது. முதலர் அசோக் கெலாட், துணைமுதல்வர் சச்சின் முதல்வரை அநாநகரிகமாக விமர்சித்த விவரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு சச்சின் பைலட் பதிலடி கொடுத்துள்ளார். இதனால், அகில இந்திய காங்கிரஸ் தலைமை கலகலத்துபோயுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்து அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. முதல்வர் பதவியில் தொடங்கிய மோதல் மீண்டும் சூடு பிடித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் அசோக் கெலாட் குதித்த நிலையில், முதல்வராக சச்சின் பைலட்டை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமை முன்வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெலாட் மேற்கொண்ட ராஜினாமா நடவடிக்கையால் மாநில காங்கிரஸ் ஆட்சியே கவிழும் நிலை உருவானது. பின்னர் கட்சி தலைமை எச்சரிக்கையால், அவர் காங்கிரஸ் தலைவர் பதவி போட்டியில் இருந்து விலகினார். இதனால் மோதல் சற்றே குறைந்திருந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் மோதல் தீவிரமடைந்துள்ளது. தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் முதல்வரும் மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான, அசோக் கெலாட், சச்சின் பைலட் 2020-ம் ஆண்டு காங்கிரசுக்கு எதிராக கொடி பிடித்தவர். எனது அரசை கவிழ்க்க முயன்றார். துரோகியான அவரை ராஜஸ்தான் முதல்மந்திரியாக்க ஒருபோதும் சம்மதிக்க என்று கூறியவர், பைலட் காங்கிரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டினார். அவர்கள்தான் எம்எல்ஏக்களை குருகிராமில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர், ஒவ்வொரு எம்எல்ஏக்களுக்கும் தலா ரூ.10கோடி கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று அதிரடியாக கூறினார்.
அடுத்த சட்டமன்ற தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கெலாட், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, கட்சித்தலைமை கருதினால், என்னை மாற்றட்டும் என கூறியதுடன், பைலட் தவிர்த்து 102 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் யாரை வேண்டுமானாலும் முதல்மந்திரி ஆக்கட்டும் என்று ஆவேசமாக கூறியவர், இந்த விவகாரத்திற்காக, அவர் (பைலட்) இதுவரை எம்.எல்.ஏ.க்களிடம் மன்னிப்பு கேட்டதில்லை என்றவ்ர, அவர் மன்னிப்பு கேட்டிருந்தால், நான் (சோனியாவிடம்) மன்னிப்பு கேட்க வேண்டி வந்திருக்காது என்றார்.
கட்சித்தலைமை பைலட்டை முதல்மந்திரியாக்க தேர்வு செய்து, முடிவு எடுத்தால், என்ன செய்வீர்கள் என கேட்கிறீர்கள். இது அனுமானத்தின் அடிப்படையிலானது. இது எப்படி நடக்கும்? அது ஒருபோதும் நடக்காது என சவால் விட்டவர், சச்சின் பைலட் ஒரு ‘துரோகி’, ‘உபயோகம் இல்லாதவன்’ அவரை முதல்வராக ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
அசோக் கெலாட்டின் இந்த பேட்டி சர்ச்சையான நிலையில், அவருக்கு சச்சின் பைலட் பதிலடி கொடுத்துள்ளார். அசோக் கெலாட் என்னை குறிவைத்து பேசி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியவர், என்னை ‘துரோகி’, ‘உபயோகம் இல்லாதவன்’ என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார். அவருடைய வயதுக்கும் அனுபவத்துக்கும், இது அழகல்ல என்று கூறியதுடன், அவர் கூறும் குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என மறுத்தார்.
தற்போது நாம் கவனம் செலுத்த வேண்டியது குஜராத் தேர்தல் களம் என கூறிய பைலட், நாம் பா.ஜனதாவுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டும்.. இது, பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரம். ஏனென்றால், காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும். இந்த நேரத்தில் மாறி மாறி சேறு வாரி வீசுவது, எந்த பயனையும் அளிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தானில் மீண்டும் தொடங்கி உள்ள மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அசோக் கெலாட், அனுபவம் வாய்ந்த, மூத்த அரசியல் தலைவர். தனது இளைய சகா சச்சின் பைலட்டுடன் அவருக்கு என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும், கட்சிக்கு வலுவூட்டும்வகையில் அதற்கு தீர்வு காணப்படும். இந்த நேரத்தில் பாதயாத்திரைக்கு வடமாநிலங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் ஒவ்வொரு காங்கிரசாரின் கடமையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.