பெர்த்:
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-0 என்ற எண்ணி க்கையில் ஆஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது.
முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 403 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 549 ரன் எடுத்திருந்தது.
கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 229 ரன், மிட்செல் மார்ஷ் 181 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். மார்ஷ் மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆண்டர்சன் வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி வெளியேறினார். ஸ்மித் 239 ரன் எடுத்து ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் 1 ரன் எடுத்து ரன் அவுட்டாக, டிம் பெய்ன் – பேட் கம்மின்ஸ் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்தது. கம்மின்ஸ் 41 ரன், நாதன் லயன் 4 ரன் எடுத்து ஆண்டர்சன் வேகத்தில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழந்து 662 எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் 4, கிரேக் ஓவல்டன் 2, வோக்ஸ், மொயீன் அலி தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 259 பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தனர். இங்கிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.
இன்று 5-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்தது. இறுதியில் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா-&இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இந்தத் தொடரில் அந்த அணி 3&-0 என முன்னிலை வகிக்கிறது
இந்த வெற்றியை தொடர்ந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச்சாளர்களை புகழ்ந்து தள்ளினார். அவர் மேலும் கூறுகையில், ‘‘இந்த வெற்றி ஒரு ஆச்சர்யமான உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருக்குகாக நாங்கள் அதிகளவில் தயார்படுத்திக் கொண்டோம். நாங்கள் பயணம் செய்த பாதை பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து பல விதமான உணர்வுகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்து வீச்சாளர்கள் இந்த தொடர் முழுவதும் அருமையான பணியை ஆற்றியுள்ளனர். 3வது போட்டியில் ஜோஸ் ஹாசிவுட் 5 விக்கெட்களை கைப்பற்றினார்’’ என்றார்.
இங்கிலாந்து கேப்டன் ஆலஸ்டெயிர் குக் கூறுகையில், ‘‘ ஆமாம், உண்மையிலேயே இந்த போட்டி மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் 3 போட்டிகளிலும் அருமையாக விளையாடினார்கள். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். அடுத்து மெல்போர்னில் நடக்கும் போட்டிக்கு எங்களை தயார்ப டுத்தி சிறப்பாக விளையாடுவோம்’’ என்றார்.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் கேப்டனாக செயல்படுவது இது முதல் முறையாகும். கடந்த முறை 2015-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.