டில்லி

காங்கிரசாரிடம் உண்மை உள்ளதால் பயமின்றி பாஜகவுக்கு எதிராக போராடுவோம் என அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்திய ராணுவத்துக்கு 126 ரஃபேல் போர் விமானம் கொள்முதல் செய்ய பிரான்ஸ் நாட்டு டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59000 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.  இதில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என முடிவு செய்யப்பட்டது.   ஆனால் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்ததால் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.

பாஜக அரசு அதே நிறுவனத்துடன் 2016 ஆம் ஆண்டு ஒரு விமானத்தின் விலை ரூ.1670 கோடி என முடிவு செய்யப்பட்டு 36 ரஃபேல் விமானம் கொள்முதல் செய்ய புதிய ஒப்பந்தம் இடப்பட்டது.  பாஜக அரசு இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு செய்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

அதே வேளையில் பிரான்ஸ் புலனாய்வு ஊடகம் ஒன்றில் போலி ஆவணங்கள் மூலமாக ரஃபேல் கொள்முதலில் எம் எஸ் குப்தா என்னும் இடைத்தரகருக்கு ரூ.65 கோடி பணம் அளிக்கப்பட்டதாகச் செய்தி வெளியானது.   இந்த பணப்பரிமாற்றம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்ததாக குறிப்பிட்ட பாஜக காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த விமர்சனத்துக்குப் பதிலாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில்,

”பாஜகவின் ஊழல் அரசை எதிர்க்கும் போராட்டத்தைக் காங்கிரஸ் கட்சியினர் நிறுத்தாமல் தொடர்ந்து போராட வேண்டும்.  நம்முடைய ஒவ்வொரு முயற்சியிலும் உண்மை உள்ளதால் கவலை வேண்டாம்.  நாம் கவலையோ பயமோ கொள்ளாமல் தொடர்ந்து போராடுவோம்.  சோர்வு வேண்டாம்”

எனப் பதிந்துள்ளார்.