நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

வழக்கம்போல வேடிக்கைதான்..
சேலம் அருகே அரசு பேருந்து தறிகெட்டு ஓடி எதிர்புறம் வந்த வாகனங்கள் மீது மோதியதில் கர்ப்பிணி பெண், குழந்தை உட்பட எட்டு பேர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்கள்.
உடனே பேருந்தை கவனக் குறைவாக ஓட்டினார் என்று பேருந்து ஓட்டுநரை கைது செய்திருக்கிறார்கள்.
ஒரு கொலை, பாலியல் பலாத்காரம் என்றால் மாநிலமே பரபரப்பாகிறது. குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் என களத்தில் இறங்கி போராடுகிறார்கள். ஆனால் எத்தனையோ பேர் பலியானாலும் சாலை விபத்திற்கு மட்டும், உண்மையான காரணம் எது காரணகர்த்தா யார் என்பதை வெளிக்கொண்டு வரவே முற்படாமல் பொந்ததுக்குள் போய் பதுங்கி விடுவார்கள்.
அரசு பேருந்து ஓட்டுநர்களில் எத்தனையோ பேர் அலட்சியமாய் செயல்பட்டு விபத்தை ஏற்படுத்துகிறார்கள். அதையெல்லாம் மறுப்பதற்கே இல்லை. மது போதை தெளியாமல் வந்து டூட்டி ஏறுகிறவர்களும் உண்டு. சாலைகளில் நெருக்கடியான நேரங்களில் கூட செல்போன் பேசிக்கொண்டே வண்டியின் கண்ட்ரோலை கோட்டை விடுபவர்களும் உண்டு.
ஓட்டுனர் கண் அசந்து விட்டதால் தான் விபத்து என்றும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். அவர் மீதும் தப்பு இருக்கலாம்.
அதே நேரத்தில் அவருடைய வழக்கமான டூட்டி முடிந்தும் பயணிகள் நெரிசலை சமாளிக்க அவரை வலுக்கட்டாயமாய் தொடர்ச்சியாக பணியாற்ற உத்தரவிட்டதாலும் அந்த ஓட்டுனர் சோர்வு நிலைக்கு போய் இருக்கலாம். பல பேரின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலும் ஓட்டுநரின் உடல் நிலையையும் மனச்சோர்வையும் பற்றி அதிகாரிகள் கவலைப்படுவதே கிடையாது.
சென்னையிலிருந்து திருச்சி சென்று மீண்டும் சென்னைக்கு என 700 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுபவரை பௌர்ணமி கிரிவலம் கூட்டம் சமாளிக்கவே முடியவில்லை, திருவண்ணாமலைக்கு வரைக்கும் போய் வாருங்கள் என்று அடுத்து 400 கிலோமீட்டர் ட்ரிப்புக்கு அப்படியே அனுப்புவார்கள். அப்படிப்பட்ட சூழலில் ஒரு விபத்து என்றால் பயணிகளுக்கு மட்டுமல்ல பேருந்து ஓட்டுனரின் உயிரும் கேள்விக்குறிதான்.
ஒரு நாளைக்கு 20+ ஆயிரம் தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஒரு கோடியே 60 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இவ்வளவு உயிர்களின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட நெட்வொர்க் என்பதால் ஒவ்வொரு மட்டத்திலும் கண்காணிப்பும் உஷார் தனமும் எந்த அளவுக்கு வேண்டும்?
உபகரணங்கள் பற்றாக்குறை என்று, நைட் ஹால்ட்டில் நிற்கும் வண்டியிலிருந்து பொருளைக் கழட்டி நைட் ட்ரிப்புக்கு போகும் வண்டியில் மாட்டி அந்த நேரத்தில் சமாளித்து விடுவார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அப்போ ஏற்கனவே பொருள் கழட்டப்பட்ட வண்டி? அதற்கு வேறு ஒரு வண்டியில் இருந்து மாற்றுவார்கள்.. ரொட்டேஷன்கள் ஓய்வதில்லை.

ஒரு விபத்தில் ஓட்டுநர்தான் குற்றவாளி என்றால் அவரை கைது செய்து சிறையில் அடைத்து தண்டனை வாங்கி தர வேண்டும். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் விபத்துக்கு காரணம் என்று வரும்போது பெரும்பாலும் ஓட்டுனர் அளவில் மட்டுமே விசாரணை நிறுத்தப்பட்டு விடுவதுதான் அயோக்கியத்தனம். ஓட்டுனர் இயக்கிய பேருந்து எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பது பற்றி அனைத்து கோணங்களிலும் விரிவான விசாரணை நடத்துகிறார்களா? தொழில்நுட்பக் கோளாறு என்றால் அது தொடர்பான பணியாளர்களையும் அதிகாரிகளையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.
தரமற்ற உபகரணங்கள் பேருந்தில் பொருத்தியிருப்பது தெரிய வந்தால் கொள்முதல் கோஷ்டியையும் வழக்கில் சேர்க்க வேண்டும். ஆனால் அப்படி போனால் அது மேல் மட்டும் வரை பாயும், போக்குவரத்து துறை ஊழல்கள் அம்பலமாகும் என்பதால் அடிமட்ட ஓட்டுனர் போன்ற அடிமட்ட தொழிலாளியோடு விஷயத்தைப் போட்டு புதைத்து விடுவார்கள். தற்செயலாக விபத்து ஏற்படுவதற்கும், விபத்து ஏற்படலாம் என்று தெரிந்திருந்தும் செயல்படுவதற்கே இடையே நிறைய வித்தியாசங்கள் உண்டு
எல்லாம் சரி, அரசின் நிலைப்பாடு? இருக்கவே இருக்கிறது, சில லட்சம இழப்பீடு கொடுத்து மார்ச்சுவரியில் இருந்து பிரதத்தை சம்பந்தப்பட்டோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விடும் வழக்கமான கடமை. எத்தனையோ முறை இது பற்றி விமர்சனம் செய்தாகிவிட்டது. இப்போதும் பாருங்கள், எட்டு பேர் பலியான விவகாரத்தில் எத்தனை அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையில் ஆழமான விசாரணை கேட்க போகிறார்கள், எத்தனை செய்தி தொலைக்காட்சிகள் விரிவாக விவாதம் நடத்தப் போகின்றன என்று…