மும்பை:
ந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பு.
தலைமைப்பண்பிற்கு மிகச்சிறந்த உதாரணமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான கங்குலி இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆப் சைடின் கடவுள் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட்டால் அழைக்கப்பட்டவர் கங்குலி. அந்தளவிற்கு தனது பேட்டிங் மற்றும் கேப்டன்ஸி மூலம் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் கங்குலி.
1996-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலே முதலாவது சதத்தை அடித்து சாதனை படைத்தார். மேலும் அதே டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து சாதனை படைத்தார்.
கொல்கத்தவின் இளவரசர் என அழைக்கப்படும் கங்குகி 1997-ஆம் ஆண்டு தொடர்ந்து 4 ஒருநாள் போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்று அசத்தினார். அதனை தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் கங்குலி-ராகுல் ட்ராவிட் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 318 ரன்களை எடுத்தனர்.
2000-ஆம் ஆண்டு இந்திய அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய போது, இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற கங்குலி திறமையான வீரர்களை அடையாளம் காண துவங்கினார். அதில் இந்திய அணிக்கு கிடைத்தவர்கள்தான் யுவராஜ் சிங், முகமது கைஃப், தோனி, ஹர்பஜன் சிங், நெஹ்ரா, ஜாகிர்கான் போன்றவர்கள்.
திறமையான இந்திய அணி வீரர்களை கொண்டு 2000- ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசியின் நாக் அவுட் கோப்பையை கங்குலி தலைமையிலன இந்திய அணி கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஆலன் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய அணியின் வரலாற்று வெற்றி.
2002-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியவுடன் சட்டையை கழற்றி சுற்றியது கங்குலியின் அடையாளமாகி போனது. அதனை தொடர்ந்து இந்திய அணியை 2003-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுத்திப்போட்டி வரை அழைத்துச்சென்றார். 2004-ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.
பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கருத்து வேறுபாடு காரணமாக கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலகி ஓய்வை அறிவித்தார் கங்குலி. 2012-ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த கங்குலி அதன் பின்னர் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
பின்னர் கொல்கத்த கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற கங்குலி திறம்பட வழி நடத்தினார். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக பொறுப்பேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். கங்குலியின் முயற்சியால்தான் இந்திய வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.