மும்பை

டிராய் அறிவித்துள்ள புதிய கட்டண திட்டத்தால் தொலைக்காட்சி கட்டணங்கள் 25% வரை உயர வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தொலைபேசி கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அனைத்து தொலைக்காட்சி கட்டணங்களையும் இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் மாற்றி உள்ளது. அதன்படி முன்பு மொத்தமாக சேனல்களுக்கு அளித்த கட்டணம் தற்போது தனித்தனியாக பிரிக்கப்பட்டு செலுத்த வேண்டி உள்ளது. டிராய் தரப்பில் இந்த முறையினால் பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்பதால் கட்டணம் குறையும் என கூறப்பட்டது.

அனைத்து கேபிள் மற்றும் டிடிஎச் நிறுவனங்களும் ஒவ்வொரு சேனலுக்குமான கட்டணங்களை அறிவித்துள்ளனர். தற்போது இலவச சேனல்களை மட்டும் பார்க்க ரூ. 130 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என டிராய் அறிவித்துள்ளது. அதற்கு மேல் பார்க்கும் ஒவ்வொரு சேனலுக்கும் அந்த சேனல்கள் அறிவித்துள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும்.

மும்பையின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான கிரைசில் இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து அந்நிறுவனத்தின் மூத்த இயக்குனர் சச்சின் குப்தா, “நாங்கள் எங்கள் ஆய்வில் புதிய கட்டண விகிதப்படி மாதக் கட்டணம் மொத்தம் எவ்வளவு ஆகிறது என்பதில் கவனம் செலுத்தி உள்ளோம். தற்போதைய கட்டணத்துடன் ஒப்பிடுகையில் மாதக் கட்டணம் 25% அதிகரிக்க உள்ளது. அதாவது அதிக வரவேற்புள்ள 10 சேனல்களை கூடுதலாக பார்க்க தற்போது ரூ.230 – -240 செலுத்தும் வாடிக்கையாளர் இனி ரூ.300 வரை செலுத்த வேண்டி வரும். அதையே 5 சேனல்களாக குறைக்கும் போது கட்டணம் சிறிதளவு குறையும்.

இதே நேரத்தில் பல புகழ்பெற்ற சேனல்கள் தங்கள் கட்டணத்தை 40% வரை உயர்த்தி உள்ளன. புகழ்பெற்ற சேனல்களை பலரும் பார்க்க விரும்புவதால் அவர்கள் சொல்லும் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை வரும். அது மட்டுமின்றி அதிகம் புகழடையாத சேனல்களுக்கு பார்வையாளர்கள் குறைவதால் ஒரு சில சேனல்கள் மூடப்படும் அபாயமும் உண்டு.

அத்துடன் கட்டணம் மிகவும் அதிகரிக்கும் போது பலர் திடீரென அந்த சேனல்களை பார்ப்பதை நிறுத்த நேரிடலாம். எனவே சேனல்களின் வருமானத்தில் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகலாம்.

அதே நேரத்தில் தற்போது இந்த புதிய கட்டண முறை ஆரம்ப கால கட்டத்தில் உள்ளது. இதற்கு பிறகு கட்டணங்களில் மாறுதல் வர மிகவும் வாய்ப்புண்டு. எனவே தற்போதைய கட்டண உயர்வு என்பது தற்காலிகமானது எனவே கூற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.