சென்னை
ரெயில்வேதுறை தாம்பரத்தில் இருந்து அதிக ரெயில்களை இயக்க உள்ளதாக வந்துள்ள செய்தி வடசென்னை மக்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
தற்போது தெற்கு தமிழகம் செல்லும் பல ரெயில்கள் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுவதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய போதுமான இட வசதி இல்லை. சென்னை – திருநெல்வேலி செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை – மதுரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் வண்டிகள் தற்போது தாம்பரத்தில் இருந்து இயங்கி வருகின்றன.
இந்த நெரிசலைத் தவிர்க்க ரெயில்வே நிர்வாகம் மேலும் சில ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன இந்தியாவில் உள்ள பல நகரங்களில் நெரிசல் காரணமாக இரண்டாவது சிறிய ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் வழக்கம் உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வட இந்தியா செல்லும் சில ரெயில்களையும் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வழியாக இயக்கவும் உத்தேசித்து வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. இந்த தகவல் வட சென்னை மக்களுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வட சென்னை பகுதிகளான அம்பத்தூர் மற்றும் எண்ணூர் ஆகிய பகுதிகள் சுமார் 37 கிமீ தூரத்தில் அமைந்துள்ளன.
ரெயில் பயணிகள் சங்க பொதுச் செயலர் முருகையன், “ரெயில்வே நிர்வாகம் தாம்பரத்தில் இருந்து அதிக ரெயில்களை இயக்கினால் திருவள்ளூரில் இருந்து கடற்கரை மற்றும் தாம்பரத்துக்கு மின்சார ரெயில்களை அதிகரிக்க வேண்டும். சாலை வழியாக அம்பத்தூரில் இருந்து தாம்பரம் செல்ல குறைந்தது 2 மணி நேரம் ஆகும். எனவே மின்சார ரெயில்களை அதிகரிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.