டில்லி

 

ரஃபேல் விமானங்களின் எண்ணிக்கையை 126 லிருந்து 36 ஆக குறைத்ததால் விலை 41% அதிகமானதாக ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஃபேல் ரக விமானங்கள் கொள்முதலில் ஊழல்கள் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அத்துடன் முந்தைய அரசு அங்கீகரித்ததை விட அதிக விலையில் தற்போது வாங்கப்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு இதற்கு மறுப்பு தெரிவித்த போதிலும் விலை விவரங்களை வெளியிட மறுத்து வருகிறது. ரஃபேல் விமான ஒப்பந்தம் குரித்து பிரான்ஸ் அரசு தகவல் தெரிவிக்க மறுத்த போதிலும் விலைக்கும் பாதுகாப்புக் கொள்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியது.

பிரபல செய்தி ஊடகமான தி இந்து இது குறித்து ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் காணப்படுவதாவது :

”ரஃபேல் விமான விலை உயர்ந்ததற்கு முக்கிய காரணம் குறித்து தி இந்து ஆய்வு செய்தது. இதில் கடந்த 2007, 2011 மற்றும் 2016ல் நடந்த பேரங்கள் பற்றி தெரியவட்ந்துள்ளது. அதை ஒட்டியே இந்த ரஃபேல் விமான விலை சுமார் 41% வரை உயர்ந்துள்ளது.

கடந்த 2007 ஆம் வருடம் அப்போதைய யுபிஏ அரசால் 126 ரஃபேல் ரக விமானங்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்படது. அப்போது பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் குறைந்த விலையை அளித்தது. அதை ஒட்டி 18 பறக்க தயாராக உள்ள விமானங்கள் மற்றும் அதே தொழில்நுட்பத்துடன் எச் ஏ எல் மூலம் தயாரிக்க உள்ள 108 விமானங்கள் என 126 விமானங்கள் கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த விமானம் வாங்க கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த பேச்சு வார்த்தையில் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 7.93 கோடி யூரோ என முடிவு செய்யப்பட்டது. அத்துடன் விலை உயர்வு ஏற்பட்டாலும் அதிக பட்சமாக 10.085 கோடி யூரோ வரை அனுமதிக்கப்பட்டது. அத்துடன் இந்த விலையில் 9% கழிவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. அதை டசால்ட் நிறுவனம் ஒப்புக் கொண்டதால் விமான விலையில் மேலும் 0.92 கோடி யூரோ குறைந்தது.

கடந்த 2016 ஆம் வருடம் இந்த நிறுவனம் இந்த விமானங்களுக்கான மென்பொருள் உள்ளிட்டவைகளுக்காகவும் வடிவமைப்புக்காகவும் 140 கோடி யூரோ கட்டணம் விதித்தது. இது பேரம் பேசி 130 கோடி யூரோவாக குறைக்கப்பட்டது. இந்த கட்டணம் ஒவ்வொரு விமானத்திலும் சமமாக பிரித்து வசூலிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. எனவே கொள்முதல் செய்யப்பட உள்ள விமான எண்ணிக்கையை பிரதமர் மோடி 36 ஆக குறைததால் ஒவ்வொரு விமானத்துக்கும் விலை கூடுதலாகியது.

என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.