டில்லி

நேற்று கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றம் காலவரையின்றி மூடபட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டிருந்தது.  இந்த அமர்வு காணொளி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.   கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நேற்று நள்ளிரவு முதல் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதையொட்டி நேற்று நள்ளிரவு உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில், “இன்று நள்ளிரவு முதல் பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  நாளை அதாவது (இன்று 25 ஆம் தேதி) உச்சநீதிமன்ற நீதிபதிகள் 15 வழக்குகளைக் காணொளி காட்சி மூலம் விசாரிக்கத் திட்டமிட்டிருந்தனர்

ஊரடங்கு உத்தரவால் இந்த வழக்குகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. அத்துடன் மறு அறிவிப்பு வரும் வரை எந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.   உச்சநீதிமன்றம் மீண்டும் எப்போது செயல்படும் என்பது மற்றும் அவசர வழக்குகள் விசாரிக்கப்படுமா என்பது குறித்தும் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.