சென்னை
நகரில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படலாம் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஜனவரி மாதம் பரவலான மழைபெய்த போதிலும் நகரின் பல இடங்களில் அதிக அளவில் மழை பெய்யவில்லை. நகரில் குழாய் மூலம் நீர் விநியோகம் இல்லாத பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டுமே நீராதாரமாக உள்ளது.. இதையொட்டி நகரின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
குடிநீர் வாரிய கண்காணிப்பு கிணறுகளில் இருந்து மாதாந்திர அளவீடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் நிலத்தடி நீர் மட்டம் சுமார் 1 அடி முதல் 1.25 அடிவரை குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. குறிப்பாக தேனாம்பேட்டை பகுதியில் மற்ற பகுதிகளை விட அதிக அளவில் நீர் மட்டம் குறைந்துள்ளது. இங்கு சுமார் 0.88 மீட்டர் வரை குறைந்துள்ளது.
அடுத்தபடியாக திருவொற்றியூரில் 0.79 மீட்டர் அளவிலும் அடையாரில் 0.77 மீட்டர் அளவிலும், குறைந்துள்ளது. அடுத்தபடியாக அம்பத்தூரில் 0.35 மீ, திரு விக நகரில் 0.34 மீ மற்றும் பெருங்குடியில் 0.27 மீ அளவுக்கு நீர்மட்டம் குறைந்துள்ளது.
கடந்த அண்டு சென்னையில் பருவ மழை இயல்பை விட அதிகமாகப் பெய்ததால் சென்னை நகரத்தின் 15 மண்டலங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தது. ஆயினும் ஜனவரி மாத கணக்கெடுப்பின் படி வழக்கத்தை விட நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதம் எப்போதைய நிலவரத்தை விட 9 மடங்கு அதிக அளவில் மழை பெய்த போதிலும் ஏற்பட்டுள்ள இந்த குறைவு அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
இந்த நிலத்தடி நீர் மட்டம் குறைவால் சென்னை ந்கர குடிநீர் வாரிய அதிகாரிகள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இவ்வளவு மழை பெய்த போதிலும் சென்னை நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்னும் அச்சத்தில் சென்னை நகர பொதுமக்கள் உள்ளனர்.