க்னோ

பாஜகவில் 16 உத்திரப்பிரதேச மக்களவை உறுப்பினர்களுக்கு இம்முறை மீண்டும் வாய்ப்பளிக்காததால் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநில பாஜக மக்களவை தேர்தல் தொகுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு மக்களவை உறுப்பினர்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தியின் தொகுதி அவர் மகன் வருண் காந்திக்கும், வருண் காந்தியின் சுல்தான்பூர் தொகுதி மேனகா காந்திக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த 16 உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்காததால் அவர்கள் பெயர் இடம் பெறவில்லை. பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, மற்றும் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் அவர்களுடைய ஆதரவாளர்கள் சுயேச்சைகளாக போட்டியிட வற்புறுத்துகின்றனர். ஆனால் இரு தலைவர்களும் அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

வாய்ப்பு அளிக்கப்படாதவர்களில் ஒருவரான பிரியங்கா ராவத் இந்த செய்தி அறிந்ததும் பொதுக்கூட்ட மேடையிலேயே கண்ணீருடன் பாஜகவை கடுமையாக சாடினார். இவருடைய ஆதரவாளர்களும் இவரை சுயேச்சையாக போட்டியிட வைக்க முயன்று வருகின்றனர். அத்துடன் அன்சுல் வர்மா, கிருஷ்ணா ராய், அஞ்சு பாலா மற்றும் அசோக் டோரா ஆகியோர் தலித் சமூகத்தினர் என்பதால் பாஜக இவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை எனவும் அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர்.

இவர்களை தவிர பதேபூர் சிக்ரியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சௌத்ரி பாபுலா தனது ஆதரவாளர்களை திரட்டி சாலை மறியல் நடத்தி உள்ளார். இதனால் அவர் தொகுதியில் போட்டியிடும் ராஜ்குமார் சோகாருக்கு பிரசாரம் செய்ய ஆட்கள் வரவில்லை. தற்போது பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அதிருப்தியாளர்களை சரிக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.