சென்னை
முதல்வருடன் நெருக்கமாக உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தமிழக முதல்வர் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதில் பல அரசு உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார். மேலும் சில சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாதிப்பு அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு சில வாரங்கள் முன்பு தலைமைச் செயலகத்தில் உள்ள சில ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டனர். அதன் பிறகு முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதையொட்டி முதல்வர் கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டதாகவும் தகவல்கள் வந்தன முதல்வர் தனது வேலை நேரம் மற்றும் பொது நிகழ்வுகளை வெகுவாக குறைத்துக் கொண்டார்.
தனது அலுவல்களை தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்திலேயே தற்போது முடித்து வரும் முதல்வர் பழனிச்சாமி தலைமைச் செயலக அலுவலகத்துக்கு மூன்று மணி நேரம் மட்டுமே வருகிறார். அப்போது அவர் மிகவும் குறைவான அதிகாரிகள் மற்றும் ஒரு சில அமைச்சர்களை மட்டுமே சந்திக்கிறார். அனைத்து அமைச்சர்களும் ஆளும் கட்சி தலைவர்களும் முதல்வரின் செயலர்கள் மூலம் தகவல்களை அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் முதல்வர் எப்போதும் ஒழுங்குமுறை வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளார். அவர் புகைபிடிப்பதோ மது அருந்துவதோ கிடையாது. தினமும் 8 மணி நேரம் தூங்கி, காலையில் விரைவில் எழுந்து சரியான நேரத்துக்கு அலுவலகம் வருவது வழக்கமாகும். அவர் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே எப்போது சாப்பிட்டு வருகிறார்.
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது இல்லத்தை விட்டு வெகு அபூர்வமாக வெளியே வருகிறார். தலைமைச் செயலகத்தில் எந்த கூட்டத்திலும் அவரை காண முடிவதில்லை. தனது வீட்டில் உள்ள 48” திரை மூலம் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் வீட்டுக்குக் குறைந்த அளவில் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களும் துணை முதல்வரை பார்க்கும் முன்பு காலணிகளைக் கழற்றி விட்டு மஞ்சள் பொடி கலந்த நீரில் கால் மற்றும் கைகளைக் கழுவிய பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.