டில்லி

ந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பதை ஒட்டி வரும் திங்கள் முதல் நிதி அமைச்சகம் தனிமப்படுத்தப்பட உள்ளது.

 

மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக மீண்டும் மோடியின் தலைமையில் புதிய அமைச்சரவை அமைத்துள்ளது. இந்த அமைச்சரவையில் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். புதிய மக்களவை கூட்டம் ஜூன் 17 முதல் ஜூலை 26 வரை நடைபெற உள்ளது. கூட்டத்தின் முதல் நாள் அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தொடரில் ஜூலை மாதம் ஐந்தாம் தேதி 2019-20 க்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி வரும் திங்கள் முதல் தொடங்குகிறது. நிதிநிலை அறிக்கை என்பது ரகசியமான ஒன்றாகும். எனவே இந்த அறிக்கை விவரங்கள் வெளியேறாமல் இருக்க வரும் திங்கட்கிழமை முதல் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

நிதிநிலை அறிக்கை தயாரிப்பை ஒட்டி நிதி அமைச்சக அலுவலகம் தனிமைப்படுத்தப்பட உள்ளது. அந்த அலுவலகத்தினுள் பார்வையாளர்களுக்கு அனுமதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இந்த அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதிலும் மின்னணு கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தபட உள்ளன. இதைத் தவிர டில்லி காவல்துரையினர் மற்றும் துணை ராணுவத்தினரும் காவலுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

நிர்மலா சீதாராமனுக்கு உதவியாளர்களாக நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் மற்றும் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்திய பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் நிர்மலா சீதாராமன் அளிக்க உள்ள நிதிநிலை அறிக்கை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.