சென்னை

விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 50% பி எஸ் என் எல் ஊழியர்கள் விலகி உள்ளதால் தமிழகத்தில் தொலைத் தொடர்பு சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளன.

அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.  நிறுவனத்தின் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கும்  வருமானம் வரவில்லை எனவும் வருமானத்தில் பெரும் பங்கு ஊழியர்களின் ஊதியத்துக்குச் செலவிடப்படுவதாகவும் அரசு தெரிவித்தது.  அதையொட்டி பி எஸ் என் எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

கடந்த சில மாதங்களாக ஊதியம் சரியான நேரத்தில் வழங்கப்படாத நிலையில் பி எஸ் என் எல் இருந்ததால் பல ஊழியர்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தனர்.   இதையொட்டி நேற்றுடன் நாடெங்கும் சுமார் 80000 ஊழியர்கள் நேற்றுடன் வெளியேறி உள்ளனர்.   நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் இருந்து இத்தனை ஊழியர்கள் வெளியேறி உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 10000 பி எஸ் என் எல் ஊழியர்கள் உள்ளனர்.  இதில் சுமார் 5300 பேர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.  இவ்வாறு சுமார் 505க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து ஒரே நாளில் விலகி உள்ளதால்  பி எஸ் என் எல் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.  சேவைகள் குறித்து புகார் அளித்தவர்களுக்கு  ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளதாகப் பதில் கிடைத்ததாகச்  சொல்லப்படுகிறது.

பணியில் இருந்து வெளியேறிய 5300 ஊழியர்களில் 2700 பேர் சென்னை சரகத்தில் பணி புரிபவர்கள் ஆவார்கள்.   சென்னை சரகத்தில் சென்னை, செங்கல்பட்டு திருவ்ள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்ளன.  இந்த சரகத்தில் 6 லட்சம் பிராட் பாண்ட் இணைப்புக்கள், 14 லட்சம் லாண்ட் லைன்க்ள், மற்றும் 1.2 கோடி மொபைல்கள் உள்ளன.