டில்லி

நாளை பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் அவசரச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

டில்லியில் பொது ஒழுங்கு, காவல்துறை மற்றும் நிலம் ஆகிய துறைகளில் மட்டுமே துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு எனவும், மீதமுள்ள துறைகள் தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றலாம் எனவும், சிவில் சர்வீசஸ் துறைகளை நிர்வகிக்கலாம் எனவும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டில்லியில் துணைநிலை ஆளுநருக்கே கூடுதல் அதிகாரம் அளிக்கும் முந்தைய நிலையே தொடரும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.  டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இந்த அவசர சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் திரட்டி வருகிறார்.

அவர் இது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து பேசினார்.  நாளை நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாட்னாவில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றன.

இந்த கூட்டத்தில் டில்லி நிர்வாகம் தொடர்பான அவசரச் சட்டம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.