புதுடெல்லி:
தேர்தல் வெற்றிக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கீழ்த்தரமாக நடந்து கொண்டதாக கிழக்கு டெல்லி பாஜக எம்பி கவுதம் கம்பீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு, முதல் முறையாக எம்பி ஆகியிருக்கிறார் கவுதம் கம்பீர்.
தேர்தல் வெற்றிக்குப் பின் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டியில், எனக்கு எதிராக போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் அதீஷ் மர்லீனாவுக்கு எதிராக ஆபாச நோட்டீஸை நான் வெளியிட்டதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
தேர்தல் வரும், போகும். ஆனால் நிதானம் தவறும் போது உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள்.
அவருக்கு எதிராக எந்த வார்த்தையையும் நான் பிரயோகிக்கப் போவதில்லை. ஒரு தொகுதியில் வெல்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறார்.
தேர்தலுக்காக நிதானம் தவறி பேசிவிட்டு தேர்தலில் தோல்வியடைந்ததும் நகர்ந்துவிடலாம். ஆனால் நிதானம் தவறியபின் எப்படி மற்றவர்களை எதிர்கொள்வார்?
எனக்கு எதிரான எதிர்மறை பிரச்சாரத்தையே ஆம் ஆத்மி மேற்கொண்டது என்றார்.
இதற்கிடையே, தனக்கு எதிரான ஆபாச நோட்டீஸ்களை கம்பீர் வினியோகித்ததாக,தேசிய பெண்கள் ஆணையத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி புகார் கொடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியும் கம்பீர் மீது இந்த பிரச்சினை தொடர்பாக புகார் அளித்துள்ளது.
ஆபாச நோட்டீஸை வினியோகித்தது யார் என்று தெரியாத நிலையில், இது குறித்து கருத்து கூறப் போவதில்லை என கம்பீர் முடிவு செய்துள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]