புதுடெல்லி:

சபரிமலை விவகாரத்தால் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் படுதோல்வி அடைந்ததா? என்பது குறித்து அக்கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் இன்று புதுடெல்லியில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து விவாதிக்கப்படுகிறது.

குறிப்பாக, கேரளாவில் சபரிமலை விவகாரத்தால் தான் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வி அடைந்ததா என்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களையும் சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு முனைப்பு காட்டியது.

அரசின் நடவடிக்கையை காங்கிரஸும் பாஜகவும் எதிர்த்தன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆலப்புலா தொகுதியில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

இந்த படுதோல்விக்கு சபரிமலை விவகாரமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு பிரிவினர் பேசத் தொடங்கியுள்ளனர்.

சபரிமலை விவகாரத்தால் இந்துக்களின் வாக்குகளை இழந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைவர்களும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

தேர்தல் முடிவு குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கொடியேறி பாலகிருஷ்ணன் பொலிட்பீரோவில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த அறிக்கை மீது பொலிட்பீரோ விவாதம் நடத்தும் என்று தெரிகிறது.