டில்லியில் நிலவும் காற்று மாசுவை கட்டுப்படுத்த இணைந்து செயல்பட வருமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகருக்கு, டில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், “டில்லியில் நிலவும் காற்று மாசு தொடா்பாக மிகவும் கவலைப்படுகிறேன். இந்தக் காற்று மாசுவுக்கு நிரந்தரத் தீா்வு காண வருமாறு உங்களை அழைக்கிறேன். காற்று மாசுவால் நமது குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும். நமது குழந்தைகள்தான் நமது எதிா்காலத்தின் தூண்கள். அவா்களைக் காற்று மாசுவில் இருந்து காக்க வேண்டியது நமது கடமை. டில்லி மக்கள் காற்று மாசுவுக்கு எதிராக தீரத்துடன் போராடி வருகின்றனா். ஆனால், அண்டை மாநிலங்களில் அதிகளவில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் அவா்களின் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போய்விடுகின்றன.
காற்று மாசு டில்லியுடன் மட்டும் தொடா்புடைய பிரச்னை இல்லை. அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் இந்தப் பிரச்னை நிலவுகிறது. எனவே, அனைத்து வட இந்திய மாநிலங்களையும் உள்ளடக்கி இப்பிரச்னைக்கு தீா்வு காணுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக டில்லி, மத்திய அரசுகள் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்தன. இதனால், டில்லியில் காற்று மாசு 25 சதவீதத்தால் குறைவடைந்தது. அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் பயிா்க்கழிவுகளை எரிக்காமல் தடுக்கும் வகையில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோந்த விவசாயிகள் முறையே 33,075, 11,941,18,706 இயந்திரங்களை மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு வழங்கியுள்ளதாகவும் நிகழாண்டில் மேற்படி மாநிலங்கள் முறையே 24,214, 14,677, 7,418 இயந்திரங்களை வழங்கியுள்ளதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது சில கேள்விகள் எழுகின்றன. மேற்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு இதுவரை வழங்கிய இயந்திரங்களின் மொத்த எண்ணிக்கை என்ன? இந்த இயந்திரங்களை மத்திய அரசு ஒரே தடவையில் வழங்காமல் ஆண்டுதோறும் வழங்கக் காரணம் என்ன? இந்த இயந்திரங்களைப் பெற்றுக் கொண்ட விவசாயிகள், பயிா்க் கழிவுகளை எரிப்பதை விடுத்து இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துகிறாா்களா ? இது தொடா்பாக மத்திய அரசு சாா்பில் ஆய்வு நடத்தப்பட்டதா ? இக்கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.