பண்ருட்டியை அடுத்த ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர். இவரை, பறையர் இனத்தைச் சேரந்த உத்ரகுமார் என்பவர், ஜெயந்திக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்தார். இதற்கு ஜெயந்தி எதிர்ப்பு தெரிவித்துவந்தார். இந்த நிலையில் ஜெயந்தி மட்டும் வீட்டில் இருக்கும் நேரத்தில், புகுந்த உத்ரகுமார், ஜெயந்தியை பலாத்காரப்படுத்திவிட்டார்.
இதையடுத்து சாதிவெறி காரணமாக, அருந்ததிய பெண்மணியை, பறையர் இனத்தைச் சேர்ந்தவர் பலாத்காரப்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து ஜெயந்தி காவல்துறையில் தெரிவித்தும் புகார் வாங்க மறுத்து அலைக்கழிக்கப்பட்டார். உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுத்தது. இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவை கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஜெயராமன், பக்கிரி, முருகன் ஆகியோர் தலையிட… புகார் பதிவு செய்யப்பட்டது. உத்ரகுமார் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நாம் அப்பகுதி டி.எஸ்.பி. முரளியை தொடர்புகொண்டு பேசினோம்.
அவர், “குறிப்பிட்ட புகார் பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கை பதிவதிலோ, குற்றம்சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதிலோ காவல்துறை சுணக்கம் காட்டவில்லை” என்று நம்மிடம் தெரிவித்தார்.
தலித் இன மக்களுக்குள்ளேயே சாதி பாகுபாடு நிலவுவதாகவும், பள்ளர் – பறையர் இன மக்கள், தங்களைவிட சமுதாயத்தின் கீழ்த்தட்டில் இருக்கும் அருந்ததி இன மக்களை சாதிப்பாகுபாட்டுடன் நடத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் தொடர்ந்து எழுந்துவருகின்றன.
பறையர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை, அருந்ததி இனத்தைச் சேர்ந்த இளைஞர் காதலித்ததால், அந்த காதல் ஜோடியை பறையர் இனத்தைச் சேர்ந்த சிலர் தாக்கியதாகவும் சமீபத்தில் செய்திகள் வந்தன.
இந்த நிலையில், அருந்ததி இன மக்களுக்காக தொடர்ந்து போராடி வரும் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமானை தொடர்புகொண்டு பேசினோம்.
அவர் நம்மிடம் தெரிவித்த கருத்துக்களில் இருந்து..
“ஒரு பகுதியில் ஐம்பது பறையர் இன குடும்பங்களும், ஐந்து அருந்ததி இன குடும்பங்களும் வசித்தால், அங்கு பறையர் இன ஆதிக்கம் நிலவவே செய்கிறது.
பாலியல் பலாத்கார விவகாரங்களில் ஏது சாதி.. ஆணாதிக்கம்தானே நிலவுகிறது என்று சிலர் கேட்கிறார்கள். உலகின் பிற பகுதிகளில் அப்படி இருக்கலாம். இங்கு ஆணாதிக்கத்தோடு சாதிவெறியும் சேர்ந்தே இருக்கிறது.
உயர் சாதி என சொல்லிக்கொள்பவர்கள் பள்ளர், பறையர் இன பெண்களுக்கு சாதி ஆணவத்தோடு பாலியல் சீண்டல் செய்கிறார்கள். பள்ளர், பறையர் இனத்தவர், அதே சாதி ஆணவத்தோடு அருந்ததி இன பெண்களை சீண்டுகிறார்கள்.
இதைச் சொன்னால், தலித் சமுதாயத்திற்குள் பிரிவினை ஏற்படும் என்கிறார்கள் சிலர். ஆனால் ஏற்கெனவே இச்சமுதாயத்திற்குள் பிரிவினை நிலவுகிறது என்பதுதான் உண்மை.
உதாரணமாகச் சொன்னால் அருந்ததி இனத்தவருக்கான 3 சதவிகித உள் ஒதுக்கீட்டை பள்ளர், பறையர் இன தலைவர்கள் எதிர்க்கிறார்கள். ஒட்டுமொத்த தலித் இன 76 சாதிகளுக்கு 18 விழுக்காடு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களில் அருந்ததியின சமுதாயத்தினருக்கு நீண்ட நாட்களாக படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் இன்னும் மற்ற உரிமைகளும் உரிய பங்குதொடர்ந்து கிடைக்காத காரணத்தினால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆகவே சமூக நீதியின் அடிப்படையில் அவர்களுக்கு மூன்று விழுக்காடு உள் இட ஒதுக்கீடு, ஆதித்தமிழர் பேரவையின் கடும் முயற்சியினால் கிடைத்தது.
ஆனால் இதை நடை முறைப்படுத்துவதில் பல்வேறு தடங்கல்கள் இருக்கின்றன. இந்த உள் ஒதுக்கீட்டை மீறி, அருந்ததி இன மக்களுக்கான பணியிடங்களை பிற தலித் இனத்தவர் பெற்றுவருகிறார்கள். சமீபத்தில் தமிழகம் முழுதும் உதவி பேராசியர் பணிக்கு ஆட்கள் எடுக்கப்பட்டபோதும் அதற்கு முன்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் எடுக்கப்பட்ட போதும் இதுதான் நடந்தது. இப்படி தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த நிலை மாற, பள்ளர் பறையர் இன மக்களின் தலைவர்களாக இருப்பவர்கள் முன் முயற்சி எடுக்க வேண்டும்.
பெரியாரையும், அம்பேத்கரையும் ஏற்றுக்கொள்ளும் தலித் தலைவர்கள் அருந்ததியின மக்களின் அடிமட்ட சூழலைப் புரிந்து உள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டும். அருந்ததி இன மக்களிடம் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என தன் இன மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஆனால், இந்த தலித் தலைவர்கள்… அருந்ததி இன மக்களின் பிரதிநிதிகளை மதிப்பதே இல்லை. தங்களது போன் எண் கூட எங்களுக்கு கிடைக்கக்கூடாது என நினைக்கிறார்கள். அப்படி எங்களுக்கு கிடைத்தாலும் அவர்களிடம் பேச முடியாது என்பதே வருத்தமான உண்மை.
சி.பி.எம். கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. கட்சியின் நல்லகண்ணு ஆகியோர் மிக உயர்ந்த தலைவர்கள். அவர்களுடன் நாங்கள் நிமிட நேரத்தில் போனில் தொடர்புகொண்டு பேச முடிகிறது. ஆனால் பள்ளர், பறையர் இன தலைவர்களாகச் சொல்லிக்கொள்பவர்களை நாங்கள் அணுக முடிவதில்லை. அப்படி அணுக அவர்கள் அனுமதித்தால்தானே எங்களது தரப்பை.. நியாயத்தை அவர்களிடம் சொல்லி புரிய வைக்க முடியும்?
சாதிப்படிநிலை ஒழிய வேண்டுமென்றால் அகமண முறை ஒழிய வேண்டும். அதாவது, சொந்த சாதிக்குள் திருமணம் செய்துகொள்வது நிறுத்தப்பட வேண்டும். இதைத்தான் அம்பேத்கர் சொன்னார்.
ஆனால் அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் தலித் தலைவர்கள், இதை பின்பற்றுகிறார்களா?
அருந்ததியினர் இனத்திலும் அகமண முறை உண்டு. அதை ஆகப்பெரும்பாலும் ஒழித்துவிட்டோம். பறையர், பள்ளர் சாதி தலைவர்களாக இருப்பவர்களும், இதைக் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் சாதி ஒழியும்” என்று சொல்லி முடித்தார் அதியமான்.
– டி.வி.எஸ். சோமு