சென்னை:
ள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா அறிவித்துள்ள வேட்பாளர் சிலருக்கு அதிமுகவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் சிலரை மாற்றக் கோரி அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
kovai
வேட்பாளர்கள் அறிவிப்பை எதிர்த்து பல இடங்களில் அதிமுக கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ்கார்டன் பகுதிக்கு ஒரு கும்பல் சென்று போராட்டம் நடத்தியது.
சென்னை மேற்கு மாம்பலத்தில்  அறிவிக்கப்பட்டுள்ள  வேட்பாளரை மாற்றக் கோரி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன் அலுவலகத்தை மகளிர் அணியினர் நேற்று முற்றுகையிட்டனர்.
கோவை:  கோவையில் அதிமுக தலைமை அலுவலகத்தை, அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பளிக்காமல் பணத்தை வாங்கிக் கொண்டு சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி மீது அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்:  அதைபோல திண்டுக்கலில் பணம் வாங்கிக் கொண்டு போட்டியிட வாய்ப்பு அளித்ததாக கூறி ஏமாற்றிய அதிமுக ஒன்றிய நிர்வாகியை கண்டித்து அதிமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூரில் தீக்குளிப்பு:  திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த அதிமுக பெண் உறுப்பினர் செல்வகுமாரி தனக்கு சீட் தரவில்லை என்று தீ குளித்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளராகவும், கவுன்சிலராகவும் இருக்கிறார்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே அதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.