டில்லி:
தனது மகளைக் காப்பாற்றுவதற்காகவே பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தில் அருண் ஜெட்லி மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘பிஎன்பி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மவுனம் சாதிப்பது ஏன் என்று தற்போது தெரியவந்துள்ளது. தனது வக்கீல் மகளைக் காப்பற்றவே அவர் இவ்வாறு செயல்படுகிறார்.
நிரவ் மோடியின் நிறுவனத்திடம் இருந்து அவரது மகளின் சட்ட நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனைக்காக பெரிய தொகை வழங்கப்பட்டுள்ளது. நீரவ் மோடிக்கு தொடர்புடைய பிற சட்ட ஆலோசனை நிறுவனங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. ஆனால் அருண்ஜெட்லி மகள் நிறுவனத்தில் நடத்தப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தி வயர் இதழில் வெளியான செய்தியை தனது டுவிட்டரில் ராகுல்காந்தி இணைத்துள்ளார். அதில், ‘‘நீரவ் மோடியின் நிறுவனத்திடம் இருந்து ஜெட்லி மகள் சட்ட நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனைக்காக பெரிய தொகை வழங்கப்பட்ட தகவல் குறித்து அறிய அருண் ஜெட்லியின் மகள் மற்றும் அவரது கணவர் இணைந்து நடத்தும் சட்ட நிறுவனத்திற்கு இமெயில் அனுப்பி இருந்தோம்.
அதற்கு ஜெட்லியின் மருமகன் ஜெயேஷ் பக்ஷி, நீரவ் மோடியின் நிறுவனத்திடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில், அவர்களது நிறுவனத்திற்காக சட்ட ஆலோசனைகள் வழங்கக் கோரி விண்ணப்பம் மற்றும் தொகை வந்திருந்ததது .
ஆனால் அது தொடர்பாக எந்த விதமான வேலைகளிலும் ஈடுபடும் முன்னரே குறிப்பிட்ட நிறுவனம் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள விபரம் தெரிய வந்தது. உடனடியாக இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அந்த வாய்ப்பை மறுத்துவிட்டோம்’’என்று குறிப்பிடப்பட்டுள்ளது.