நியூயார்க்:

சாகஸம் செய்வதாக நினைத்தும், தற்பெருமைக்காகவும் சிபிஐ வழக்கு போடுவதால்தான், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார்.

ஐசிஐசிஐ வங்கியில் கடன் வழங்கியதில் ரூ. 1,875 கோடி முறைகேடு நடந்ததாக, அந்த வங்கியின் முன்னாள் தலைமை செயல் அலுவலர் சந்திரா கோச்சா அவரது கணவர், வீடியோகான் நிறுவன இயக்குனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது  முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது,


சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இது குறித்து தனது ப்ளாக்கில் அவர் எழுதியிருப்பதாவது:

ஆதாரம் இல்லாமல் வழக்கு போட்டு, அதனை பத்திரிகைகளில் செய்தியாக்குவதின் மூலம், குற்றஞ்சாட்டப்பட்டவரை துன்புறுத்தி அவரது புகழையும் பணத்தையும் இழக்க வைக்கும் நோக்கிலேயே இத்தகைய விசாரணை அமைந்துள்ளது.

தொழில்சார்ந்த விசாரணை மட்டுமே அடிப்படை ஆதாரத்தின்படி நடக்கும். சாகஸம் செய்வதாக நினைத்தும், தற்பெருமைக்காகவும் விசாரணை நடத்துவதால் தான், பெரும்பாலான வழக்குகளில் தண்டனை பெற்று தருவது இயலாத ஒன்றாகிவிடுகிறது.

மகாபாரதத்தில் அர்ஜுனன் கூறியது போல், காளையின் கண்களைப் போல் கூர்மையாக விசாரணையை நோக்குங்கள் என்பதுதான் சிபிஐ அதிகாரிகளுக்கு நான் கூறும் அறிவுரை.