டில்லி
காங்கிரஸ் கட்சி ஆதார் பற்றி தனது கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளதாக அமைச்சர் அருண் ஜெட்லி கூறி உள்ளார்.
டில்லியில் நேற்று ஆதார் பற்றிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா நடைபெற்றது. சங்கர் ஐயர் என்பவர் எழுதிய இந்தப் புத்தகத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டார். இந்த நிகழ்வில் அவர் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், “ஆதார் விவகாரத்தில் காங்கிரஸ் தனது கொள்கையை மாற்றிக் கொண்டு விட்டது. அந்தக் கட்சி இரு கொள்கைகளைப் பின்பற்றுகிறது. இந்த ஆதார் சட்டத்தை அவர்கள் தான் கொண்டு வந்தனர். ஆனால் நாங்கள் அந்தச் சட்டத்தை செயல் படுத்தும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் போது ஒரு கொள்கையும், எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போது வேறுவிதமான கொள்கையும் கொண்டுள்ளனர். இருக்கும் இடத்தைப் பொருத்து அவ்வபோது காங்கிரஸ் தனது கொள்கையை மாற்றிக் கொள்கிறது” என கூறி உள்ளார்.