சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், மேலும் 3 வாரம் அவகாசம் கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் உள்பட பலர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அப்போதைய அதிமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரித்து வந்தது. இந்த ஆணையம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், அதிமுக நிர்வாகிகள்,  ஓபிஎஸ், சசிகலா உள்பட 154 பேரிடம் விசாரணை நடத்தியது.

சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆணையத்துக்கு தமிழகஅரசு வழங்கிய அவகாசம், ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தர விட்டது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் ஆணையத்தின் இறுதி அறிக்கை இந்த வாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழுவிடம் ஒப்படைக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இதையடுத்து கூடுதல் அவகாசம் கேட்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்து மேலும் 3 வார காலம் அவகாசம் வேண்டும் என தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியாவதில் தாமதமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.