சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கான அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, உடல்நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்தன.
இதையடுத்து விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுவாக எழுந்தன. அதை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தை அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அமைத்தார்.
2017ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. பல கட்டங்களில் பல்வேறு தரப்பினரை ஆணையம் அழைத்து விசாரணை நடத்தியது. ஒவ்வொரு முறையும் இந்த ஆணையத்தின் அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
ஆணையத்துக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஜூன் 24 ம் தேதியுடன் முடிந்தது. அதன் பிறகு, 5வது முறையாக 4 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
ஆணையத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந் நிலையில், கால அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆணையத்துக்கு 6 வது முறையாக தற்போது நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.