டெல்லி: ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடால் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக மறுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பல கட்ட விசாரணைகள் முடிவடைந்த நிலையில், கடந்த விசாரணையின்போது, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு விரிவான இடம் ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக அரசை அறிவுறுத்தியது.

அதையடுத்து, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,   “தற்பொழுது உள்ள ஆறுமுகசாமி ஆணையத்தின் அலுவலகத்திற்கு பதில் 700 சதுர மீட்டர் பரப்பில் அளவிலான கூடுதல் இட வசதியுடன் கூடிய அலுவலகம் அமைத்து தரப்பட்டு உள்ளது” என தெரிவிக்கப்பட்டது

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஆறுமுக சாமி ஆணையத்திற்கு நீங்கள் இன்னும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என விரும்புவதாக தெரிவித்ததுடன், இப்போது நீங்கள் செய்து கொடுத்துள்ள இடம்  உணவு மேஜை போடுவதற்கான அளவே உள்ளது, இது எப்படி போதும் என்று வினவியதுடன், ஆணைய அறை நீதிமன்ற தோற்றம் போல் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினர்.

தொடர்ந்து அப்போலோ மற்றும் தமிழகஅரசு மற்றும் ஆணையம் தரப்பில் காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து, “எத்தனை சாட்சியங்களை குறுக்குவிசாரணை செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள் என அப்போலோ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்,  அதனை அறிக்கையாக எங்களிடம் தாக்கல் செய்யுங்கள்” என உத்தரவிட்டனர்.

இதனையடுத்து ‘ஆணையத்தின் செயல்பாடு – மருத்துவ குழு அமைப்பது – அனைத்து தரப்பும் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவான தீர்ப்பு வழங்கப்படும்’ எனக்கூறி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.