சாரதா மாரியம்மன் திருக்கோயில், கோபிசெட்டிப்பாளையத்தில் அமைந்துள்ளது.
பவானி நதிக்கரையில் உள்ள வீரபாண்டி கிராமம் நீர் வளமும், நிலவளமும் மிகுந்த பகுதி. அருகிலுள்ள கிராம விவசாயிகள் கால்நடைகளை மேய்க்க இப்பகுதிக்கு வருவர். ஒருமுறை, கால்நடைகளை மேய்க்க வந்த சிறுவர்கள், விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு இருந்த வேப்பமரங்களின் நடுவே பிரகாசமான ஒளி தோன்றியது. அவர்கள் பயந்து ஓட முயன்றனர். அப்போது அசரீரி ஒலித்தது. “குழந்தைகளே. நில்லுங்கள். நானும் உங்களுடன் விளையாட வந்துள்ளேன். தினமும் இங்கே நாம் அனைவரும் விளையாடலாம்” என ஒலித்தது. உடனே பெரும் காற்று வீசியது. தூசி பறந்து அந்த இடமே சுத்தமாயிற்று; வேப்பமரத்தின் இலைகள் சில உதிர்ந்து ஒரு சிறிய கல்லைச் சுற்றி விழுந்தது. அந்தக்கல்லை எடுக்க அச்சிறுவர்கள் முயன்றனர். ஆனால், அதைத் தூக்க முடியவில்லை. அப்போது அசரீரி மீண்டும் ஒலித்தது. “குழந்தைகளே. நான் இவ்விடத்தில் குழந்தையாக இருக்கப் போகிறேன். கல் இருக்கும் இடத்தில் எனக்கு கோயில் கட்டி வழிபட்டால் இவ்வூரை மட்டுமின்றி என்னை வழிபட எங்கிருந்து யார் வந்தாலும் காப்பாற்றுவேன்” என்றது. சிறுவர்கள் தங்கள் பெற்றோரிடம் விபரத்தைக் கூறினர். அதே நாளில், குறிப்பிட்ட இடத்தில், கோயில் கட்ட வேண்டும் என ஊர் பெரியவர்கள் கனவு கண்டனர். இதையடுத்து, 1917ல் சிறிய கோயில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது.
முன்பு கிராமமாக இருந்த வீரபாண்டி, நகரமாக மாறி தற்போது கோபி செட்டிப்பாளையம் என்ற பெயரில் விளங்குகிறது. நகரின் மையப்பகுதியில் கோயில் அமைந்து உள்ளதால் “டவுன் மாரியம்மன் கோயில்” என்று பெயர் மாற்றம் பெற்றது.
சுயம்பாக தோன்றிய கல் வடிவ அம்மன் கருவறையில் உள்ளது. குழந்தைகளுடன் குழந்தையாக விளையாட வந்த அம்மன் என்பதால், குழந்தை வடிவத்தில் அம்மன் சிலை வடித்து, கல்லின் அருகில் பிரதிட்டை செய்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன் சிருங்கேரி சாரதா பீடாதிபதி அபிநய வித்யா தீர்த்த சுவாமிகளின் கனவில், இந்த அன்னை தோன்றியதால், அவரும் இங்கு வந்து வழிபட்டார். பின்னர் டவுன் மாரியம்மன் என்ற பெயர் நீங்கி, “சாரதா மாரியம்மன்” என்று அழைக்கப்படுகிறது. சுவாமிகள் அன்னையின் கருவறையில் அமர்ந்து வழிபடும்போது, “நீர் எனக்கு பூசை செய்யும் போது பயன்படுத்திய இரண்டு தேங்காய்களை அங்கேயே வைத்துவிட்டு செல்லவும்” என ஓர் அசரீரி ஒலித்தது. அதன்படி தான் பூசித்த இரு தேங்காய்களை அன்னையின் பாதத்தில் வைத்து சென்றார். அந்த இரண்டு தேங்காய்களும் 40 ஆண்டுகளாக சிறிது நிறம் கூட மாறாமல் அப்படியே உள்ளது. இந்த தேங்காய்களுக்கு செவ்வாய், வெள்ளிகிழமை மற்றும் அமாவாசை தினங்களில் 1008நாம அர்ச்சனை செய்து, வடை, பாயாசம் நைவேத்யம் செய்து பூசிக்கப்படுகிறது.
திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், திருமாங்கல்யம் செய்வதற்குரிய தங்கத்தை அம்பாளின் திருவடியில் வைத்து திருமாங்கல்யம் செய்வதற்கு வழங்குகின்றனர். நிச்சயதார்த்தம் செய்வதற்கு இரு வீட்டாரும் இரு கூடைகளில் உப்பு, வெற்றிலை, பாக்கு வைத்து பூசித்து, அவற்றை மூன்று முறை மாற்றிக் கொண்டு உறுதி செய்கின்றனர்.
திருவிழாக் காலங்களில், இங்குள்ள வாய்க்காலில் பசுமாட்டையும், கன்றையும் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, மாலைகள் அணிவித்து கோமாதா பூசை செய்கின்றனர். பின்னர் பால்கறந்து, அந்தப்பாலை குடத்தில் ஊற்றி, ஊர்வலமாக வருகின்றனர். அதுவே அம்பாளுக்கு அபிசேகம் செய்யப்படுகிறது.
இங்கு நடக்கும் பூச்சாட்டு திருவிழாவின் ஏழாம் நாள் பால்மரம் என்று கூறப்படும் ஆலமரத்தின் இரு கிளை கொண்ட ஒரு பாகத்தை வெட்டி எடுத்து வருகின்றனர். அதில் துளையிட்டு அம்மன் திருவுருவம் செதுக்குகின்றனர். அக்கம்பத்தை அருகில் உள்ள தெப்பக்குளத்திற்கு எடுத்து சென்று புனிதநீர் ஊற்றி, பூசை செய்து மீண்டும் கோயிலில் வந்து நடுகின்றனர். அக்கம்பம் மகாமாரியம்மனின் கணவர் என்று கூறப்படுகிறது. தினமும் காலை, மாலை பெண்கள் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பூசி, மாலையிட்டு சுற்றி வந்து வேண்டுதல் செய்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் திருமணத்தடை, பிள்ளைப்பேறு வேண்டுவோர்க்கு பலன் கிடைக்கிறது என்பது நம்பிக்கை.
பூவோடு என்றால் மண் சட்டியில் அக்னி வளர்த்து அதில் வேப்பங்குச்சிகளைப் போட்டு வெறும் கையினால் பூசாரி எடுத்து வருவார். அந்த சட்டி சூடு இல்லாமல் பூப்போல் மென்மையாக இருப்பதால் பூவோடு என்று பெயர் வந்தது. பூவோடு பூசையில் பங்கேற்றால் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மறைந்து ஒளிமயமான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என்பது நம்பிக்கை.
இந்த அம்பாளுக்கு சாரதா என்ற பெயர் இருப்பதால், குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக இவளை வணங்கி வரலாம். அம்மை குணமாக அம்பாளுக்கு வேப்பிலை வைத்து நீர் ஊற்றி வழிபடலாம். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியத்துக்கும் வெள்ளி, செவ்வாய் ராகு காலத்தில் தீபம் ஏற்றுகின்றனர். மாணவர்கள் சிறப்பாகப் படிக்கவும், மன அமைதிக்காகவும் இங்குள்ள அம்மனை வழிபடுகின்றனர்.
அம்மனுக்கு அபிசேகம் செய்து, புத்தாடை சாத்தி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.