ருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில், நன்னிலம் – நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். கோயிலின் முன்னால் வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளது. எதிரில் சிவாகம தேவார பாடசாலை உள்ளது.

இத்திருக்கோயில் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. உயிர்கள் இறைவன் திருவடிகளைப் புகலாக அடைந்த ஊர். எனவே திருப்புகலூர் என்று பெயர் பெற்றிருக்கலாம் என்பர். இத்தலத்திற்குப் புன்னாகவனம், சரண்யபுரம், ரக்தாரண்யம் என்பன வேறு பெயர்கள். திருநாவுக்கரசு நாயனார் சித்திரைச் சதய நாளில் இறைவனடி சேர்ந்த பெருமையுடைய தலம். முருகநாயனார் அவதாரத் தலம். சுந்தரருக்கு இறைவன் செங்கற்களைப் பொன்னாக மாற்றித் தந்தருளிய தலம். அக்கினி, பாரத்வாஜர் முதலியோர் வழிபட்டது. இத்தலத்திருந்த முருகநாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்த செய்தி பெரிய புராணத்தில் வருகின்றது. இத்திருமடம் தற்போது ஆதீனமுள்ள இடமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மூலவர் – வாணாசூரன் (பெயர்த்தெடுக்கமுயன்றதால்) கோணப்பிரான் என்னும் பெயருக்கேற்பச் சற்று வடக்காகச் சாய்ந்துள்ளது. குவளை சார்த்தப்பட்டுள்ளது. மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன. நடராசசபை அழகாகவுள்ளது. உற்சவ மூர்த்தங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 1) அக்கினி (2 முகம் 7 கரங்கள 3 திருவடி 4 கொம்புகள் 7 ஜ்வாலைகளுடன் கூடிய உருவம்) 2) முகாசூரசம்ஹார மூர்த்தி, 3) சோமாஸ்கந்தர் முதலியவை மிகச்சிறப்பானவை.

அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவிலில் வைகாசி பூர்ணிமா, வைகாசி பிரம்மோற்சவம், சித்திரை சதயம் அப்பர் திருவிழா போன்றவை சிறப்பாக கொண்டாப்டபடுகிறது.