சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான, சென்னை கொளத்தூர் தொகுதி உள்பட 4 இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகள் நடப்பாண்டு தொடங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டிருந்தபடி, இந்து கோவில்களை நிர்வகித்து வதும் தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் 4 அரசு கலைக்கல்லூரிகள் நடப்பாண்டு தொடங்கப்படுகின்றன. அதன்படி, முதல்வர் ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூரில், ஸ்ரீ கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியும், திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலைஅறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.
இந்த கல்லூரிகள் தற்காலிகமாக தனியார் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகவும், இநத் 4 கல்லூரிகளிலும், பிசிஏ, பி.காம், பிபிஏ, பிஎஸ்சி (கம்ப்யூட்டர்) ஆகிய 4 பாடப்பிரிவுகளில் தொடங்கப்படுவதாகவும், இதற்கான மாணவர் சேர்க்கை அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.