அம்மான்:

கற்பழிப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளியே திருமணம் செய்து கொண்டால் சிறைத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவு 308 அரபு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில் அமலில் இருந்தது. இதை எதிர்த்து கிறிஸ்தவ, முஸ்லிம் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பெண்களும் நீண்ட நாட்களாக போராடி வந்தனர்.

இச்சட்டத்தின் மூலம் கற்பழிக்கப்பட்ட பெண்ணை சம்மந்தப்பட்ட குற்றவாளியே திருமணம் செய்து கொண்டால் தொடர் சிறை தண்டனையில் இருந்து தப்ப முடியும். இந்த சட்டம் தற்போது ஜோர்டான அமைச்சரவை கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம பாதிக்கப்பட்ட பெண்களின் நேர்மையும், புகழும் பாதுகாக்கப்படும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இச்சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர் 15 வயது முதல் 18 வரையிலான பெண்ணாக இருந்தாலும், சம்பவம் நடந்தை ஒப்புக்கொண்டால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் இச்சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உயர்மட்ட குழு கருத்து தெரிவித்தது. அந்த சமயம் சமூக நல ஆர்வலர் லைலா நபா இதை வரவேற்றார்.

இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை…

20 வயதான நூர் என்ற பெண் 55 வயதான தனது முதலாளியால் கற்பழிக்கப்பட்டார். தலைவலி என்று கூறிய நூருக்கு சில மாத்திரைகளை முதலாளி கொடுத்தார். அதன் பின் அவர் சுய நினைவை இழந்தார். அதற்கு பின் என்ன நடந்தது என்பதை அவரால் உணர முடியவில்லை. நினைவு திரும்பி பார்த்தபோது அவர் நிர்வாணமாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் கற்பழிக்கப்பட்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

இதை அவரது குடும்பத்தாரிடமும் தெரிவிக்க முடியவில்லை. இதன் பின் நூர் கர்ப்பமானார். அப்போது தான் கற்பழிப்பு குறித்து நூர் புகார் செய்தார். ஆனால், அவரது முதலாளி நூரை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். இதில் வேறு எதையும் தேர்வு செய்யும் மன நிலையில் நூர் இல்லை. பின்னர் அவரது குடும்பத்தாரும் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளனர்.

தனது குழந்தையை பாதுகாக்கும் வகையில் திருமணத்திற்கு நூர் சம்மதித்தார். அவரது பெயரை தனது குழந்தையின் தந்தை பெயராக பதிவு செய்ய முயன்று நூர் தோற்றார். தந்தையாக பதிவு செய்யவேண்டும் என்றால் விவாகரத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று நூரிடம் நிபந்தனை விதித்தார் முதலாளி. கற்பழிப்பு குற்றவாளியோடு வாழ பிடிக்காமல் விவகாரத்திற்கு நூர் சம்மதித்தார்.

அவரது உரிமைகளை விட்டுக் கொடுத்து நீதிமன்றத்தில் விவகாரத்து கோரினார். இதுநாள் வரை தந்தையின் பெயரை தனது குழந்தைக்கு பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறார். தற்போது கற்பழிப்பு குற்றவாளியே பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த கொடுமைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது என்று சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.