சென்னை: டிபிஐ வளாகத்தில் இன்று 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று 8வது நாளாக தொடர்ந்து வந்தது. இடைநிலை ஆசிரியர்கள் & டெட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதம் இருந்து சோர்ந்து கிடந்த ஆசிரியர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து பல்வேறு இடங்களில் அடைத்து வைத்தனர்.
காவல்துறையினர் இந்த நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது, அதிமுக, பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் தமிழக அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சத்தன. இந்த நிலையில், ஆசிரியர்கள், ஆசிரியைகள் கைதாகி திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.