சென்னை:

காவிரி விவகாரம் தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் புரசை வாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்தார் ஸ்டாலின். புதுமணத் தம்பதிகளுக்கு திருநாவுக்கரசர், திருமாவளவன், கீ.வீரமணி உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக  சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன்  உள்பட பலர் பங்கேற்ற சாலை மறியல் போராட்டம் அண்ணா சாலையில் நடைபெற்றது. தொடர்ந்து பேரணியாக சென்று மெரினாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள்  தற்போது புரசைவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விடுதலை கட்சியை சேர்ந்த விழுப்புரத்தை சேர்ந்த தொண்டர் ஒருவரது  திருமணத்தை வி.சி. தலைவர் திருமாவளவன் நடத்தி வைப்பதாக இருந்தது. ஆனால், அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், அந்த திருமண தம்பதியின் குடும்பத்தினர் விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்தனர்.

அதைத்தொடர்ந்து, ஸ்டாலின், திருமாவளவன் உள்பட தலைவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் திருமா வளவன் முன்னிலையில், ஸ்டாலின்  தாலிக்கயிறை எடுத்துக்கொடுக்க மங்களகரமாக திருமணம் நடந்தேறியது.

அதைத்தொடர்ந்து புதுமண தம்பதிகளை  அனைத்துக்கட்சி தலைவர்களும் வாழ்த்தினர். இது வியப்பை ஏற்படுத்தியது.