திருவள்ளுர்: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான வடமாநில வாலிபரிடம் போலீஸ் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். கஞ்சா போதைக்கு அடிமையான அந்த வாலிபரை பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றவாளியை நேரில் பார்த்து அடையாளத்தை உறுதி செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருவதுடன், அதிகரித்து வரும் போதை பழக்கங்களால், பாலியல் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த வாரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரம்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய 10 வயது சிறுமி , ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடமாநில வாலிபர் சிறுமி வாயை பொத்தி தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி வைரலான.
இந்த வழக்கில் குற்றவாளி ஒருவாரத்திற்கும் மேலாக கண்டுபிடிக்க முடியாத நிலையில், காவல்துறை குற்றவாளியை அடையாளம் காண்டு தகவல் தெரிவிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணியை காவல்துறை முடுக்கி விட்டது.
இந்த நிலையில், இந்த பாலியல் வழக்கில், குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரைக் காவல்துறை 14 நாட்களுக்கு பிறகு ஆந்திராவில் மாநில எல்லை பகுதியில் நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது. சூலூர்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். வாலிபரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரைக் காண்பிக்குமாறு பொது மக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்துப் பேசிய வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், கைது செய்யப்பட்டுள்ள நபரின் அடையாளங்கள் தேடப்பட்ட நபருடன் பொருந்திப் போவதால் கைது செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். முப்பது வயது மதிக்கத்தக்க அந்த நபரிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், தற்போது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்த விவரங்கள் காவல்துறை வெளியிடவில்லை.
இந்த நிலையில், அந்த வடமாநில வாலிபரிடம் விடிய விடிய காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விசாரணையில், கைது செய்யப்பட்ட வாலிபர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், சூலூர்பேட்டையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். கஞ்சா போதைக்கு அடிமையான அந்த நபர், ஓட்டலுக்கு கூட செல்லாமல் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்ததுடன்க, வாரம் தோறும் சனிக்கிழமை விடுமுறை எடுத்து தமிழக எல்லைப் பகுதியான கிராமங்களுக்கு சுற்றுலா போல வருவது அந்த நபரின் வழக்கமாக இருந்துள்ளது.
அதன்படி சம்பவத்தன்று (சனிக்கிழமை) அந்த வாலிபர் கும்மிடிப்பூண்டிக்கு வந்தது உறுதியானது. அந்த வாலிபரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் காண்பித்தபோது அவர்தான் என உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபரை ஆரம்பாக்கத்தில் வைத்து விசாரித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. அந்த வடமாநில வாலிபரிடம் 15 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த வாலிபரை மகிளா கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.