நெல்லை: பாஞ்சாகுளம் தீண்டாமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரும் கிராமத்திற்குள் நுழைய 6 மாதம் தடை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சிறுவர்களுக்கு கடையில் தின்பண்டம் தரமாட்டோம் என்றும் ஊர் கட்டுப்பாடு உள்ளது என்று பெட்டிக்காரர் கூறும் வீடியோ கடந்த வாரம் வைரலானது.  இது சாதிய தீண்டாமை என புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த  காவல்துறையினர் ஊர் நாட்டமை மகேஸ்வரன், மற்றும் ராமசந்திரமூர்த்தி, சுதா, குமார், முருகன் ஆகிய 5 பேர்  மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட நிலையில்,  தலைமறைவான குமார் என்பவர் கோயமுத்தூரில்  கைது செய்யப்பட்டார். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து, திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் முதன்முறையாக வன்கொடுமை தொடர்பாக ஊருக்குள் நுழைய குற்றவாளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.