பகல்பூர்
பகல்பூரில் நிகழ்ந்த கலவரத்தை ஒட்டி மத்திய அமைச்சர் அஸ்வினி குமாரின் மகன் அரிஜித் சாஷ்வந்த் உட்பட ஒன்பது பேர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி பகல்பூரில் அரசு அனுமதி இன்றி இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்தியதாக கூறப்படுகிறது. பாரதிய நவ வருஷ் ஜாக்ரன் சமிதி என்னும் புது வருட கொண்டாட்ட அமைப்பு நடத்திய இந்த ஊர்வலத்தில் கலவரம் வெடித்துள்ளது. அது வகுப்புக் கலவரமாக மாறியது. இதனால் சம்பா நகர் பகுதியில் வன்முறை ஏற்பட்டு இரு காவலர் உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்திய கூடுதல் தலைமை நீதிபதி அஞ்சனி குமார் ஒன்பது பேர் மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார். மத்திய அமைச்சர் அஸ்வினி குமாரின் மகன் அரிஜித் சாஷ்வந்த், அபய்குமார் கோஷ், சோனு, பிரமோத் வர்மா, தேவ் குமார் பாண்டே, சஞ்சய் பட், சுரேந்திர பாதக், அமித்லால் ஷா, பிரணவ் தாஸ் ஆகிய ஒன்பது பேர் மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பகல்பூர் காவல்துறை சூப்பிரண்ட் இந்த வாரண்ட் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறி உள்ளார். அமைச்சர் அஸ்வினி குமார் தனது மகன் ஏதும் தவறு செய்யவில்லை எனவும் அதனால் அவர் சரண் அடைய தேவை இல்லை எனவும் கூறி உள்ளார்.