சென்னை:  பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் கைது எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கைதுகள் தொடரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

குஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார்.  இந்த  கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் போலீசார் ஒவ்வொரு கட்டமாக அலசி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து வருகின்றனர். இந்த கொலை விவகாரம் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இதன் பின்னணியில் பெரிய சதி இருப்பது போலீஸாரின் தொடர் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. கட்டப்பச்சாயத்து, நிலஅபகரிப்பு, போதை பொருள் விற்பனை போன்றவற்றில் ரவுடிகள், அரசியல் கட்சிகைள சேர்ந்த நிர்வாகிகளுக்கு  இடையே ஏற்பட்ட போட்டி காரணமாகவே ஆம்ஸ்டிராங் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடுசுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும்,  இந்தக் கொலை சம்பவத்தில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும், ரவுடிகளும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக, திமுக, அதிமுக, பாஜக, தமாகா, விசிக  உள்பட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பல வழக்கறிஞர்கள், ரவுடிகள் என அடுத்தடுத்து பலர்  சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ஆம்ஸ்ட்ராங் எனப்படும்  ஒரு ரவுடியை கொல்ல பல ரவுடிகள் ஒன்றிணைந்து  செயல்பட்டு, தீர்த்து கட்டியது தெரிய வந்தது.  கைது செய்யப்பட்ட வர்களிடம் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  ஒவ்வொருவரையும் தனித்தனியாக தங்கள் காவலில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்போது போலீஸ் காவலில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளனர்.

இந்த நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த  மேலும் ஒரு திருவேங்கடம் என்பவரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். துபாயில் இருந்து அதிகாலையில் விமானத்தில் சென்னை வந்த திருவேங்கடத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் ரவுடி சம்பவ செந்தில் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி சம்பவ செந்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்பவ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு போலீசார் தீவிரமாக அவரை தேடி வருகின்றனர். இதேபோல் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்கிறது கைது படலம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!