சென்னை: அரியர் உள்ள மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் அளிக்கலாம் என்று உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனால் சுமார் 5லட்சம் மாணவர்களின் வயிற்றில் தமிழகஅரசு பால் வார்த்துள்ளது. மாணவர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்ற னர்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கல்வி நிறுவனங்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக முடங்கி உள்ளன. இதனால், பெரும்பாலான பள்ளி, கல்வித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் மட்டுமே நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அரியர் ஸ் மாணவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அரியர்ஸ் தேர்வுக்கு பணம் கட்டிய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து, அரியர்ஸ் மாணவர்களின் வயிற்றில் பால்வார்த்தது.
தமிழகஅரசின் இந்த முடிவுக்கு சில கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, அனைத்து அரியர்ஸ் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பல ஆண்டுகாலமாக, தேர்ச்சி பெறாமலும், அரியர்ஸ் தேர்வு எழுத பலர் முன்வராத நிலையில், அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக எப்படி அறிவிக்க முடியும் என கேள்வி எழுப்பப்பட்டது. சுமார் 5 லட்சத்துக்கும் மேலான அரியர் மாணவர்களில், பெரும்பாலானவர்கள் முந்தைய தேர்வுகளிலும் தோல்வி பெற்றுள்ளதால், அவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது என்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அரசிடம் தங்களின் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது தேர்ச்சி குறித்து உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அரியர்ஸ் மாணவர்கள், ஏற்கனவே எடுத்திருந்த முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்கள் மற்றும் உள்மதிப்பீட்டு மதிப்பெண் அடிப்படை யில், தேர்ச்சி வழங்க வேண்டும் என்றும் கூறியிருப்பதுடன், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி அறிவிக்கவும் உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மேலும், கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள், அடுத்து நடைபெறும் செமஸ்டர் தேர்வை எதிர்கொண்டு தேர்வு எழுதி அதிக மார்க் பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.