சென்னை :
சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் இ-பாஸ் விண்ணப்பித்த 30,000 க்கும் மேற்பட்ட நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய தரவுகள் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை என்று மென்பொருள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் தனது ட்விட்டரில் நேற்று தெரிவித்திருந்தார்.


அதிகாரிகளால் வழங்கப்பட்ட அவசரகால பாஸ்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களின் தரவுகள் சுலபமாக திருடப்பட்ட வாய்ப்புள்ளதாக மே 4 மாலை 6:31 மணிக்கு பாப்டிஸ்ட் ட்வீட் செய்ததை தொடர்ந்து, இரவு 8:18 மணியளவில், சென்னை மாநகராட்சி இந்த பாதிப்புகளை சரிசெய்துள்ளது.
மேலும், இந்த தகவலைப் பாதுகாப்பாக வைத்திருக்க சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன ? என்பது குறித்தோ, தரவுகள் கசிவு குறித்து வெளியான தகவல் பற்றியோ இதுவரை எந்த ஒரு அறிக்கையையும் மாநகராட்சி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியது போல், ஆரோக்கிய சேது செயலியில் உள்ள தரவுகளும் கசியக்கூடிய வாய்ப்பு இருப்பதை தான் உறுதிசெய்திருப்பதாக இன்று தனது ட்வீட்-ல் மென்பொருள் ஆராய்ச்சியாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.