டில்லி

ண்டிகோ விமானத்தில் அர்னாப் மற்றும் குனால் கம்ரா இடையில் நடந்த வாக்குவாதத்தில் குனால் மீது தவறு இல்லை என இண்டிகோ விமானக் குழுத் தலைவர் கூறி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த 28 ஆம் தேதி அன்று மும்பையில் இருந்து லக்னோ செல்லும் இண்டிகோ விமானத்தில் தொலைக்காட்சி நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் நகைச்சுவை நடிகர் குனால் கம்ரா இடையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.  இதையொட்டி குனால் கம்ராவுக்கு இண்டிகோ விமான நிறுவனம் ஆறு மாத பயணத் தடை விதித்தது.  அதைத் தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் மற்றும் கோ ஏர் விமான நிறுவனங்களும் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் மணி கண்ட்ரோல் செய்தி ஊடகம் தகராறு நடந்த விமானக் குழுவின் தலைவர்  இது குறித்து நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள இ மெயில் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.  ஆனால் இந்த செய்தியில் அந்த குழுத் தலைவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

அவர் தனது இ மெயிலில், “நான் அறிந்த வரையில் நடிகர் குனால் புகார் அளிக்கும் அளவுக்கு எந்த விதமான தவறான நடவடிக்கையும் செய்யவில்லை. அவர் மிகவும் அமைதியாக நடந்துக் கொண்டதாகவே தெரிய வந்தது.  இது போலப் பல நிகழ்வுகள் ஏன் இதை விட மோசமான நிகழ்வுகளும் விமானத்தினுள் நிகழ்ந்த போதிலும் நாங்கள் அது குறித்து புகார் அளித்ததில்லை.

அத்துடன் எனது விமான நிறுவனம் சமூக வலைத் தள பதிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது என் மனதுக்குப் பிடிக்க வில்லை.   இது குறித்து அந்த விமானத்தைச் செலுத்திய விமானியிடம் எவ்வித விளக்கமும் கேட்கவில்லை.   என்னுடைய 9 வருட விமான அனுபவத்தில் இதைப் போல் ஒரு நடவடிக்கையை நான் பார்க்கவில்லை.

இது போலப் புகழ் பெற்றவர்கள் தொடர்புள்ள் விவகாரங்களில் பயணிகள் இடையே உயர்ந்தவர்  தாழ்ந்தவர் என வித்தியாசம் பார்ப்பது தவறு என நான் கருதுகிறேன்.   இது குறித்து விமான நிறுவனம் விளக்கம் அளித்தால் தேவையற்ற ஊகங்களுக்கு ஒரு முடிவு உண்டாகும்” என தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் காணப்படுகிறது.

அத்துடன் இது குறித்து அந்த ஊடகம் இண்டிகோ நிறுவனத்திடம் விசாரித்த போது, “எங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்ததை அடுத்து எங்கள் நிறுவனத்தின் உட்குழு விசாரணை நடத்தியது.   அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட விமானக் குழு தலைவர் ஏதும் விவரம் அளிக்க மறுத்துள்ளதாகவும் செய்தியில் தெரிவித்துள்ளது.