புனே: 
புனே ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் உள்ள அரங்கிற்கு நீரஜ் சோப்ராவின் பெயர் சூட்டப்பட உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியின் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
இந்நிலையில், அவரது வரலாற்றுச் சாதனையை அங்கீகரிப்பதற்காகவும், இளம் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியை ஊக்குவிப்பதற்காகவும்,  புனே உள்ள தெற்கு கமாண்டின் ராணுவ விளையாட்டு நிறுவனம் (ஏஎஸ்ஐ) வளாகத்தில் உள்ள தடகள அரங்கத்திற்கு நீரஜ் சோப்ராவின் பெயர் சூட்டப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 23-ஆம் தேதி அன்று நடைபெறும் பெயர் சூட்டும் விழாவில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மேலும்,  ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்எம் நரவனே மற்றும் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜேஎஸ் நைன் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து இந்த மைதானம்   ‘நீரஜ் சோப்ரா ஆர்மி ஸ்போர்ட்ஸ் மைதானம்’ என்று அழைக்கப்படும்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தினசரி பயிற்சி அளிக்கப்படும் இந்த மைதானம், சர்வதேச தரத்தில் உள்ளது. நாங்கள் சமீபத்தில் இந்த மைதானத்தை மேம்படுத்தியுள்ளோம். மேலும் இதுவரை இந்த அரங்கத்திற்கு எந்த முக்கிய நபரின் பெயரும் வைக்கப்படவில்லை.
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற பிறகு ஏஎஸ்ஐக்கு அவரது முதல் வருகையின் சிறந்த பரிசாகப் பெயரிட நாங்கள் நினைத்தோம், என்று கூறினார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு கட்டப்பட்டு இந்த மைதானத்தில் 400 மீ செயற்கை பாதை மற்றும் பார்வையாளர்கள் அமரும் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.  சோப்ரா தனது முதல் வருகையின் போது, ASI இல் மற்ற விளையாட்டு வீரர்களுடன் பேசுவார்” என்றும் அந்த அதிகாரி கூறினார்.