சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சிகளைச் சர்ந்த  4 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு புதுச்சேரி   பார் கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, ஆம்ஸ்ட்ராங் குறித்து தகவல் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் திருமலை உள்பட  மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கூலிப்படையை சேர்ந்த திருவேங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர்கள் ஹரிஹரன், அஸ்வத்தாமன், சிவா, ஹரிதரன் ஆகியோர் வழக்கு முடியும் வரை நீதிமன்றத்தில் தொழில் செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும், எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் மோதலில் ஈடுபட்டதாக வழக்கறிஞர்கள் செந்தில் நாதன், சக்தி வேல், விஜயகுமார், விமல் மற்றும் தினேஷ்குமார் ஆகிய 5 பேருக்கும் நீதிமன்றங்களில் தொழில் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோல,   கொலை வழக்கில் ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோவிந்தராஜன் மற்றும் முகநூலில் ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த மணியரசன் ஆகியோருக்கும் தடை விதித்துள்ளது.