சென்னை: சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்து யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த பொழுது, உணவு டெலிவரி செய்வதுபோல் வந்த எட்டு பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. A
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, அடுத்தடுத்து பலரை கைது செய்தனர். ரவுடி நாகேந்திரன் ஏ1 குற்றவாளியாகவும் அவரது மகன் அஸ்வத்தாமன் ஏ2 குற்றவாளியாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது திருவேங்கடம் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் மற்றும் அவரது மனைவி பொற்கொடி ஆகியோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடை கோரியும், சிபிஐ விசாரணை உத்தரவை ரத்து செய்யவும் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், “சென்னை ஐகோர்ட்டின் சிபிஐ விசாரணை உத்தரவு நீடிக்கும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எந்தத் தடையும் இல்லை” என்று தெளிவுபடுத்தினர். இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு உத்தரவிட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளது. இதனை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.
தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய கொலை வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அடுத்தடுத்து திமுக அரசு முட்டுக்கட்டைகளை போடுவது கண்டிக்கத்தக்கது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே, அவரது கொலை வழக்கில் தமிழக காவல்துறை நடத்தி வரும் விசாரணை ஐயத்திற்கு இடமானதாகவே இருக்கிறது. அவரது கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதை விட, உண்மைக் குற்றவாளிகளை பாதுகாப்பதில் தான் காவல்துறை தீவிரம் காட்டியது.
உண்மைகள் வெளிவந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைத் தொடர்ந்து தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி ஆணையிட்டது.
அதைத் தாங்கிக்கொள்ள முடியாத தமிழக அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத்துக்கு சென்று சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செல்லும் என்று கடந்த 10 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்யவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் அரசு விரும்பினால், சிபிஐ விசாரணையை ஏற்றுக் கொண்டு, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத திமுக அரசு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை நிறுத்தி வைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை பலிகடாக்களாக மாற்றி விசாரணை வளையம் விரிவடையாமல் தடுக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிபிஐ விசாரணையை தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல்முறை யீடு செய்திருப்பது வரை திமுக அரசின் அனைத்து செயல்பாடுகளும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே உள்ளன.
தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள் தொடர்பான வழக்குகள் அடுத்தடுத்து சிபிஐ விசாரணைக்கும், சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்றப் பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு, நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு வழக்கு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தமிழ்நாடு காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது. மக்களின் நம்பகத் தன்மையை இழந்து விட்ட தமிழக காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது.
எனவே, இந்த வழக்கில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதையும், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.”
இவ்வாறு கூறி உள்ளார்.
https://patrikai.com/tamil-nadu-government-against-appeal-in-supreme-court-against-order-transferring-armstrong-murder-case-to-cbi/