வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களை திரையில் கொண்டுவந்த வசந்தபாலனின் அடுத்த படைப்பு அநீதி.
அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது பள்ளி நண்பர்கள் எம்.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து துவங்கி இருக்கிறார் வசந்தபாலன்.
இந்நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகிறது அநீதி.
‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய அர்ஜூன்தாஸ் இப்படத்தில் கதைநாயகனாக தோன்றுகிறார். ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா விஜயன் கதைநாயகியாக நடித்திருக்கிறார்.
வசந்தபாலனால் ‘வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.வி..பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர்.
வசந்தபாலனின் முந்தைய படங்களில் பாடல்கள் எழுதிய மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார். ஜிவி பிரகாஷ் பாடிய அப்பாடல் இனிமையான காதல் பாடலாக வந்துள்ளது.
வனிதா விஜயகுமார், ‘நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ‘அறந்தாங்கி’நிஷா, காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்கள்.
‘இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதாகவும், ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும்’ என்றும் வசந்தபாலன் தெரிவித்தார்.