2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படம் வெளியானது.

இதன் வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கைப் போலவே இந்தியிலும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

தெலுங்கில் இந்தப் படத்தின் முதல் எடிட் 4 மணி நேரம் 20 நிமிடமாக இருந்தது. பின் எடிட் செய்து 3 மணி நேரம் 45 நிமிடங்களாகக் குறைத்தார்கள். இன்னும் குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்து இறுதியாக 3 மணி நேரம் 6 நிமிடங்களாக படம் வெளியானது.

தற்போது அந்த 3 மணி நேரம் 45 நிமிடங்கள் கொண்ட பதிப்பை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 5-ம் ஆண்டு கொண்டாட்டத்துக்கு 3 மணி நேரம் 45 நிமிடங்கள் பதிப்பு வெளியாகும் என இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தெரிவித்துள்ளார் .