அரியத்துறை ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் திருத்தலம்.
சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள். அவை (1) ஈசானம், (2) தத்புருஷம், (3) வாமதேவம், (4) சத்யோஜாதம், (5) அகோரம்.
பஞ்சமுகங்களுடன் பெருமான் எழுதருளி அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பஞ்ச பிரம்ம திருத்தலங்கள் எனப்படும். அவை யாவும் ஆரணி நதிக்கரையில் அமைந்துள்ளன. இந்நதிக்கு பிரம்மாரண்ய தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. பிரம்மதேவர் இந்நதியை உருவாக்கியதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
ரோமேச மகரிஷி என்பவர் தவம் செய்தபோது, பிரம்மதேவர் இந்நதிக்கரையில் உள்ள மரங்களை மத்தாக்கி கடைந்தாராம். அப்போது அக்னியும் கூடவே தண்ணீரும் தோன்றியதாம். அவ்வாறு தோன்றிய ஊற்றுத் தண்ணீரே பிரம்மதீர்த்த நதியாகும்.
இங்கு ரோமேச மகரிஷி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் ரோமேச மகரிஷிக்கு காட்சி கொடுத்தார். அப்போது ரோமேச மகரிஷி, சிவபெருமான் அரியத்துறையில் நிரந்தரமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்குமாறு கேட்க, சிவபெருமானும் அதற்கு இசைந்து அருள்பாலித்து வருகிறார்.
அதன் பிறகு இங்கு முகுந்த ரிஷியும் தவமிருந்தார்.
பின்னர் அவர் காசி திருத்தலம் செல்ல எண்ணிய போது, சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்து, காசி செல்ல வேண்டிய அவசியமில்லை, பிரம்மாரண்ய நதிக் கரையிலேயே கங்கை தோன்றுவாள் என்று கூறி மறைந்தார். உடனே ஆரணி நதிக்கரையில் ஒரு சிறு ஊற்று தோன்றி பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. முகுந்த ரிஷியும் அதில் நீராடி, இறைவனை வணங்கினார். அப்போது சிவபெருமான் பைரவராக முகுந்த ரிஷி முன் தோன்ற, முகுந்த ரிஷி அவரிடம், இந்த ஊற்று நீர் என்றுமே வற்றாமல் பெரும் நதியாகப் பெருகித் திகழவேண்டும், மக்கள் அதில் நீராடி கங்கையில் நீராடிய புண்ணியப் பலனைப் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். சிவபெருமானும் அவரது வேண்டுகோளை ஏற்றார், அந்நதியே பிரம்மாரண்ய நதியாகப் பெருக்கெடுத்தது.
இத்திருத்தல அம்பிகை ஸ்ரீ மரகதவல்லி திருமணத் தடைகளைப் போக்கி நல்ல வரன் அமைத்து திருமணத்தையும் நடத்தித் தந்து, புத்திர பாக்கியத்தையும் அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை.
இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர் நாக தோஷங்களை நீக்கி அருள்பாலிப்பதால், அதற்கான பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இத்திருத்தலத்தில் நவக்கிரகங்கள் கிடையாது. ஆனால், சூரியனும் சந்திரனும் புடைப்புச் சிற்பங்களாக தூண்களில் அருள்பாலிக்கின்றனர்.
அரியத்துறை ஸ்ரீ மரகதவல்லி உடனாய ஸ்ரீ வரமுக்தீஸ்வரர் திருத்தலம், சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள குறுக்கு வழிச் சாலையில் இருந்து சுமார் 3 கி.மீ. சென்றால் கவரப்பேட்டை என்னும் ஊரை அடையலாம். அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அரியத்துறை திருத்தலம்.